லஹைனா- அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 89ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயில், எட்டு தீவு நகரங்கள் உள்ளன. இங்கு, இரண்டாவது பெரிய நகரமாக மவுய் உள்ளது. இங்கு, கடந்த 8ம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீ, அருகில் உள்ள சிறு நகரங்களுக்கும் பரவியது.
குடியிருப்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் தீ பரவியதை அடுத்து, மவுய் நகரில் இருந்த ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.
அழகிய பூங்காக்கள், 2,000க்கும் அதிகமான கட்டடங்கள் என நகரின் முக்கிய அடையாளங்கள் தீயில் கருகின.
பழமைவாய்ந்த லஹைனா நகரின் முக்கிய பகுதிகளும் காட்டுத் தீயின் கொடூர ஜுவாலைகளில் சிக்கி உருக்குலைந்தன. நுாற்றுக்கணக்கான வீடுகள் சாம்பலாகின.
தீ விபத்தில் இருந்து உயிர்பிழைக்க நினைத்த பலர், கடலில் குதித்து தப்ப முயன்றனர். மீட்புப் பணிகள் விரைவாக நடந்த நிலையில், தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை, 89 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மவுய் நகரில் இரண்டு இடங்களில் மட்டும் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணிகள், ஓரிரு நாளில் முடியும் என கூறப்படுகிறது.
மவுய், லஹைனா, மோலோகாய் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ள நிலையில், அவர்கள் முகாம் களில் தங்க வைக்கப்பட் டுள்ளனர். தற்காலிக குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு, அவர்களை அங்கு அனுப்பும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
உலக அளவில் பருவ நிலையில் ஏற்பட்ட மாற்றம், அதீத வெப்பம், அதிக காற்று மற்றும் உலர்ந்த தாவரங்கள் உள்ளிட்டவை காட்டுத் தீயின் பரவலுக்கு காரணமாக சொல்லப்படுகின்றன.
![]() |
இருப்பினும், ஈரப்பதம் நிறைந்த ஹவாய் தீவில், இந்த விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவரவில்லை.
எரிமலைகள் நிறைந்த ஹவாய் தீவில், சமீபத்தில் ஏற்பட்ட சூறாவளியால் காட்டுத் தீ பல இடங்களுக்கு பரவியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது-.
கடந்த, 100 ஆண்டுகளில் அமெரிக்காவில் நிகழ்ந்த மிகப்பெரிய காட்டுத் தீ விபத்து இது என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
