டெல்லி,
நாட்டில் பொது கழிவறை திட்டத்தின் முன்னோடியாக கருத்தப்படுபவர் பிந்தேஷ்வர் பதக் (வயது 80). சமூக ஆர்வலரான இவர் 1970ம் ஆண்டு தொண்டு நிறுவனத்தை தொடங்கி பொது கழிவறை கட்டுவதை ஊக்கப்படுத்தி வந்தார். மேலும், திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிப்பதற்கு எதிரானவும், மனிதக்கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதற்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.
பிந்தேஷ்வர் பதக்கின் திட்டத்தால் அவரின் தொண்டு நிறுவனம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. சமூக, தன்னார்வு பணிக்காக பத்ம பூஷன் உள்பட பல்வேறு விருதுகளையும் பிந்தேஷ்வர் பெற்றுள்ளார். பல நாடுகளும் இவருக்கு விருது வழங்கியுள்ளது.
இந்நிலையில், 80 வயதான பிந்தேஷ்வர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றிய பின் வீட்டில் இருந்த பிந்தேஷ்வருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிந்தேஷ்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிந்தேஷ்வரின் மறைவிற்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.