”சிறுபான்மையினர் பற்றிய எங்களின் பார்வை மிகத் தெளிவானது. சிறுபான்மையினரும் இந்தியாவின் குடிமக்கள்தான். அவர்களுக்கும் சம உரிமைகள், பொறுப்புகள் இருக்கின்றன. இது மதச்சார்பற்ற தேசம். அதனால், இங்கே சிறுபான்மையினர் ஒருபோதும் அச்சத்தில் வாழக் கூடாது.”
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவருடைய நினைவுநாளான இன்று அவருடைய பேச்சு அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் இந்து ராஜ்ஜியம் பற்றி பேசியிருக்கிறார்.
வீடியோ பதிவில் இடம்பெற்றுள்ள தகவல்: “ஆர்எஸ்எஸ் ஒருபோதும் இந்து ராஜ்ஜியம் கோரவில்லை. அதன் இலக்கு பாரதிய ராஜ்ஜியம். ராஜ்ஜியம் என்பதன் பின்னணியைப் பார்த்தால் இந்தியா 1947-ல் உருவானது அல்ல; அது அதற்கும் வெகு பழங்காலத்தில் உருவான கலாசாரம், அதனால்தான் இந்து ராஜ்ஜியம் எனக் குறிப்பிடுவதைவிட பாரதிய ராஜ்ஜியம் எனக் குறிப்பிட வேண்டும் எனக் கூறுகிறேன். நாங்கள் இந்து ராஜ்ஜியத்தையோ, இறையாட்சியையோ வலியுறுத்தவில்லை. மதத்தின் பெயரிலான அரசியல் இந்த நாட்டில் இதுவரை நடந்ததில்லை. இனியும் எதிர்காலத்தில் நடக்காது.
சிறுபான்மையினர் பற்றிய எங்களின் பார்வை மிகத் தெளிவானது. சிறுபான்மையினரும் இந்தியாவின் குடிமக்கள்தான். அவர்களுக்கும் சம உரிமைகள், பொறுப்புகள் இருக்கின்றன. இது மதச்சார்பற்ற தேசம். அதனால் இங்கே சிறுபான்மையினர் ஒருபோதும் அச்சத்தில் வாழக்கூடாது.
இந்த நாட்டில் பெரும்பான்மை சமூகமாக இருப்பதால் இந்துக்கள் தங்களுக்கு சிறுபான்மையினரைக் காட்டிலும் சில சிறப்பதிரகாரங்கள் வேண்டுமென நினைத்தால் அதுதான் இனவாதம். சிறுபான்மையினருக்கு ஏற்படும் தீங்கை குறைக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் சம உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன . அரசியல் சாசனம் அனைவருக்கும் சமமான உரிமைகளைக் கொடுத்துள்ளது. சுதந்திரமான நீதித் துறை இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் அரசியலமைப்பைக் காப்பாற்ற இருக்கிறது. அப்படியிருக்க சிறுபான்மையினருக்கு எதிரான அநீதிகள் குறைய வாய்ப்புள்ளது” என்று அந்த வீடியோவில் வாஜ்பாய் பேசியுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றிய சில முக்கியக் குறிப்புகள்: * மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடுத்தரக் குடும்பத்தில் (1924) பிறந்தவர். தந்தை பள்ளி ஆசிரியர், கவிஞர். குவாலியர் பள்ளியில் பயின்றார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
* விக்டோரியா கல்லூரியில் சமஸ்கிருதம், இந்தியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கான்பூர் டிஏவி கல்லூரியில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். சட்டப் படிப்பில் சேர்ந்தவர், அதை பாதியில் விட்டுவிட்டு, 1939-ல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் முழுநேர பிரச்சாரகராகச் சேர்ந்தார்.
* ‘பாஞ்சஜன்யா’ என்ற இந்தி வார இதழ், ‘ராஷ்டிரதர்மா’ என்ற இந்தி மாத இதழ், ‘அர்ஜுன்’, ‘ஸ்வதேஷ்’ நாளேடுகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஷியாமா பிரசாத் முகர்ஜி தொடங்கிய ‘பாரதிய ஜனசங்கம்’ கட்சியின் நிறுவனர்களில் ஒருவராக செயல்பட்டார்.
* நாட்டின் விடுதலைக்குப் பிறகு நடந்த 2-வது மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். பாரதிய ஜனசங்கத்தின் மக்களவை கட்சித் தலைவராக 1957 முதல் 1977 வரை இருந்தார். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, குஜராத் மாநிலங்களில் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு வென்றவர்.
* பிரதமர் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் 1977-ல் வெளியுறவு அமைச்சராக அங்கம் வகித்தார். பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக 1980 முதல் 6 ஆண்டுகாலம் இருந்தார். இந்தியப் பிரதமராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆட்சியில், பொக்ரானில் 5 அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன.
* இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டவர். இவரது ஆட்சிக்காலத்தில், டெல்லி – லாகூர் இடையே பஸ் போக்குவரத்துடன், பாகிஸ்தானுடனான அமைதிக்கான நம்பிக்கையும் துளிர்விட்டது. சுதந்திர இந்தியாவில், காங்கிரஸ் தவிர்த்து முதல்முறையாக 5 ஆண்டுகள் பதவியில் நீடித்தது இவரது அரசு மட்டுமே.
* மக்களவை உறுப்பினராக 9 முறை, மாநிலங்களவை உறுப்பினராக 2 முறை இருந்தவர். ஏறக்குறைய 50 ஆண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். நாடாளுமன்ற விவாதங்களில் இவரது ஆழமான கருத்துகளும், அவற்றை இவர் வெளியிடும் பாங்கும் மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்பட்டன.
* இவரது ஆட்சிக் காலத்தில் தனியார் துறை மற்றும் அந்நிய முதலீட்டை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள், தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
* பல நூல்கள், கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார். 1992-ல் பத்மவிபூஷன் விருது பெற்றார். கான்பூர் பல்கலைக்கழகம் இவருக்கு தத்துவத்துக்கான டாக்டர் பட்டம் வழங்கியது. சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது, லோகமான்ய திலகர் விருது, கோவிந்த வல்லப் பந்த் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். நாட்டின் மிக உயரிய ‘பாரத் ரத்னா’ விருது கடந்த ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது.
* இயற்கையை நேசிப்பவர், சிறந்த எழுத்தாளர், வசீகரமான பேச்சாளர், கவிஞர், கட்சி வேறுபாடின்றி அனைவராலும் விரும்பப்படும் ஆளுமையாகப் புகழ் பெற்றவர்.