"தனக்கு இருக்கும் நோய் குறித்து சமந்தா வெளிப்படையாகப் பேசுவதற்கான காரணம் இதுதான்!"- விஜய் தேவரகொண்டா

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா.

இவர், கடந்த ஆண்டு தனக்கு ‘மயோசைட்டிஸ்’ (Myositis) எனும் நோய் எதிர்ப்புத்திறன் பாதிப்பு இருப்பதாகவும், அதில் போராட்டமான நாள்களைக் கடந்து, இப்போது முழுமையாக மீளும் நாளை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாகப் பகிர்ந்திருந்தார். இதனால் சில காலம் அவர் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து ஓய்விலிருந்தார்.

சமந்தா, விஜய் தேவரகொண்டா

இதையடுத்து சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக `குஷி’ திரைப்படத்தில் நடித்தார். இப்படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சிகிச்சைக்காக முன்னணி தெலுங்கு நடிகர் ஒருவரிடமிருந்து ரூ.25 கோடி ரூபாய்க் கடன் வாங்கியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இதை மறுத்து இந்தச் செய்திகள் போலியானது என்று விளக்கமளித்திருந்தார். இப்படியாக ஒருபக்கம் சிகிச்சை, நடிப்பு மறுபக்கம் விமர்சனங்கள் என அனைத்தையும் சமாளித்து மன உறுதியுடன் திரைத்துறையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறார் சமந்தா.

இந்நிலையில் ‘குஷி’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் உடல் நிலை குறித்தும் பேசியிருந்தார்.

அதில், “இந்தப் படத்தை ஏப்ரல் 2022ல் புன்னகையுடன் தொடங்கினோம். 60 சதவிகிதம் முடித்திருந்தோம். 30-35 சதவிகித படப்பிடிப்பு மட்டுமே எடுக்க வேண்டியிருந்தது. ஜூலை மாதத்தில் சமந்தாவின் உடல் நிலை மோசமடைந்தது. ஆனால், அவருக்கு ஏற்பட்டிருக்கும் ‘மயோசைட்டிஸ்’ நோய்ப் பாதிப்பு பற்றி அவர் ஏதும் சொல்லாமல் உடல் நிலை சரியில்லை என்று மட்டும் எங்களிடம் சொன்னார். நாங்களும் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டோம்.

சமந்தா, விஜய் தேவரகொண்டா

நிறைய நாள்களுக்குப் பிறகுதான் சமந்தாவின் உடல்நிலை குறித்து எங்களுக்குத் தெரிய வந்தது. ஆனால், பொது வெளியில் இதைப் பற்றி அவர் ஏதும் பேசவில்லை. அந்த நேரத்தில் அவர் எங்களிடமும் பேசவில்லை, பார்க்கவும் விரும்பவில்லை. அந்த அளவிற்கு அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. பெரும் போராட்டத்திலிருந்தார்.

நாங்கள் நடிகர்கள், எங்கள் கஷ்டங்களையும், போராட்டங்களையும் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டியதில்லை என்று நினைப்போம். சமந்தாவும் அப்படிதான் இருந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் தனது உடல்நிலையைப் பற்றிப் பேசுவது தனது பொறுப்பு என்று உணர்ந்தார். தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று அனைவருக்கும் சொல்ல நினைத்தார். அதனால் தனக்கு ஏற்பட்டிருக்கும் ‘மயோசைட்டிஸ்’ பாதிப்பு பற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டார்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.