"பெண்களுக்கு இதுவரை என்ன பண்ணிருக்கீங்க.." கேள்வி கேட்ட நிருபர்.. நமீதா சொன்ன பதில்தான் ஹைலைட்

சென்னை:
தமிழக பாஜகவில் செயற்குழு உறுப்பினராக உள்ள நடிகை நமீதாவிடம், “பெண்களுக்கு இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்” என நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும்தான் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

தமிழக பாஜக தலைவராக எல். முருகன் இருந்த சமயத்தில், அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தவர் நடிகை நமீதா. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பாஜக வேட்பாளர்களுகக்கு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார் நமீதா. கட்சிப் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபடுவதை பார்த்து, அவருக்கு தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் பொறுப்பும் வழங்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து நமீதாவை பல நிகழச்சிகளில் காண முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் நமீதா பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி பெண்களுக்கான பல்வேறு போட்டிகளை நமீதா இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர், “பெண்களுக்காக மத்திய பாஜக அரசு பல நலத்திட்டங்களை செய்து வருவதாக சொன்னீர்கள். பாஜக செயற்குழு உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் பெண்களின் வளர்ச்சிக்காக இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்?” எனக் கேட்டார்.

அதற்கு பதிலளித்த நமீதா, “என் வீட்டில் அனைத்து வேலைகளையும் பார்க்க பெண்களைதான் வைத்திருக்கிறேன். அவர்களில் 2 பெண்களுக்கு 22, 23 வயது ஆகிறது. எனவே அவர்கள் விரைவில் திருமணம் செய்வார்கள். அந்த திருமணத்தை நான்தான் நடத்தி வைக்கப் போகிறேன். இப்படி என் வீட்டில் வேலை பார்க்கும் பெண்களுக்கு நான் உதவி செய்து வருகிறேன்” என அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.