லட்சாதிபதியாகப்போகும் 2 கோடி பெண்கள்… 'லக்பதி திதி யோஜானா' பத்தி தெரியுமா?

மகளிருக்காக மத்திய அரசு, சுய உதவி குழுக்கள் உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் பெண்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதோடு அவர்களின் தன்னம்பிக்கையையும் அதிகரிக்க செய்கிறது. அவற்றில் ஒன்றுதான் லட்சாதிபதி சகோதரிகள் எனப்படும் லக்பதி திதி யோஜனா திட்டம்.

இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கான பணியை செய்து தன்னிறைவு அடைவதோடு மற்ற பெண்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் செயல்பட முடியும். இந்த திட்டம் ஹரியான மாநிலம் ஃபதேஹாபாத் மாவட்டத்தின் அலிகா கிராமத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு இந்த திட்டத்தின் பெயர் பிரேம் சுய உதவிக் குழு. இந்தக் குழுவுடன் தொடர்புடைய பல பெண்கள் தற்போது ஆண்டுக்கு லட்சக்கணக்கில் சம்பாதித்து தங்களின் குடும்பத்தை கவனித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த லக்பதி திதி யோஜனா திட்டத்தைதான் நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் தொடங்கவுள்ளதாக கூறியுள்ளார் பிரதமர் மோடி.

நாடு முழுவதும் கிராமங்களில் வசிக்கும் இரண்டு கோடி பெண்களை லட்சாதிபதியாக மாற்ற வேண்டும் என்பது தனது கனவு என்று கூறியுள்ள பிரதமர் மோடி, அதற்காக பிளம்மிங், எல் இ டி பல்ப் போன்றவற்றை உருவாக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் லக்பதி திதி யோஜனா தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வேளாண்மை பணிகளுக்கான ட்ரோன்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். முதல் கட்டமாக, 15000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இந்த ட்ரோன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற திட்டங்களால் கிராமங்களில் வசிக்கும் பெண்களும் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையிலும் அவர்கள் தொழில் தொடங்கவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் கிராமப்புற பெண்களுக்காக தொடங்கப்படவுள்ள இந்த லக்பதி திதி யோஜனா திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.