ஜெயிலர்: “சீக்கிரம் வாங்க சார் உங்களை நேர்ல பாக்கணும்" – நெகிழ்ந்த நெல்சன்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், வசந்த் ரவி ஆகியோர் நடிப்பில்  வெளியான படம் ஜெயிலர்.

ரஜினி ரசிகர்கள், ஃபேமிலி ஆடியன்ஸ் என அனைத்து தரப்பு மக்களும் இப்படத்தை கொண்டாடி வரும் நிலையில் படக்குழுவினரின் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் நெல்சன்,சுனில், வசந்த் ரவி, மிர்னா,ரெடின், சூப்பர் சுப்பு ,விஜய் கார்த்திக் கண்ணன், ஜாஃபர், ஸ்டன் சிவா ஆகியோர் கலந்துகொண்டனர்.

வசந்த் ரவி

முதலில் பேசிய வசந்த் ரவி , ” என் முதல் படமான தரமணிலிருந்து இப்போ ஜெயிலர் வரை ரஜினி சாரின் பாராட்டைப்  பெற்றுக்கொண்டே வருகிறேன். ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒவ்வொரு நாளும் அவரிடமிருந்து எதோ ஒன்று கற்றுக்கொள்ள வேண்டும் என்று  நினைப்பேன். கடைசிநாள் படப்பிடிப்பின் போது ஐ மிஸ் யு சார்! மறுபடியும் உங்களுடன் ஒரு படம் பண்ண ஆசையா இருக்கு என்றேன். ‘நிச்சயம் பண்ணுவோம் வசந்த்’ என்றார். அவரை நான் சார் என்று அழைத்தாலும் மனதளவில் அப்பாவைப் போலவே பார்க்கிறேன். ” என்று நெகிழ்ச்சியாக பேசினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய மிர்னா, “அனிருத் தொட்டதெல்லாம் பொன்தான். ஜெயிலர் ஆல்பம் வேற லெவல் ஹிட் . இந்த திரைப்படம் என் கரியருக்கு மிக முக்கியமான படம். கேரள, ஆந்திரா என எல்லா ஊரிலும் என்னை அடையாளம் கண்டு பாராட்டுகிறார்கள். எல்லா இந்திய நடிகர்களுக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சாருடன்  நடிக்க வேண்டும் என்ற கனவு நிச்சயம் இருக்கும். அந்த கனவு  எனக்கு சீக்கிரமே நினைவாகி இருக்கிறது” என்றார்.

மிர்னா

தன்ராஜ் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்த அர்ஷத் பேசுகையில் , “நான் இந்த மேடையில் நிற்க நெல்சன் அண்ணா மட்டுமே காரணம் . அவரின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அவர் பட்ட கஷ்டங்களைப்  பார்த்து இருக்கிறேன். படப்பிடிப்பின்போது ஒருநாள் அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. அதனைப் பொருட்படுத்தாமல் வேலைதான் முக்கியம் என்று செயல்பட்டுக் கொண்டிருந்தார்.    

அர்ஷத்

நிறைய பேருக்கு டாக்டர் , லாயர் ஆகணும் என்றெல்லாம் கனவுகள் இருக்கும் . ஆனால் எனக்கு சின்ன வயதிலிருந்தே ரஜினி சார் மாதிரி ஆகணும் என்றுதான் ஆசை. அவர் கை கொடுத்தாலே அந்த பூரிப்பில் இருந்து மீண்டு வர ஒரு மாதம் ஆகும். இதுவரைக்கும்  வாழ்க்கையில் ஏதும் உருப்படியாக செய்யவில்லை. ஆனால் தற்போது ரஜினி சார் படத்தில் நடித்துவிட்டோம்  என்கின்ற திருப்தி இருக்கிறது” என்றார் . 

‘ஹுக்கும்’ பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அலப்பறையைக் கிளப்பிய பாடலாசியர் சூப்பர் சுப்பு பேசுகையில்,

சூப்பர் சுப்பு

“எனக்கு வாய்ப்பளித்த அனிருத்திற்கு ரொம்ப ரொம்ப நன்றி . நாங்கள் ஆசைப்பட்ட மாதிரி எங்க தலைவரைக் கொண்டாடின நெல்சன் அண்ணாவுக்கு ரொம்ப நன்றி” என சொல்லி உணர்ச்சிபொங்க நெல்சன் காலில் விழ போனார் . 

ரெடின் கிங்ஸ்லி

அடுத்து பேசிய ரெடின் கிங்ஸ்லி “10 தீபாவளி ஒரே நாளில் வந்தால்  எப்படி இருக்குமோ அப்படி இருந்தது ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் ரிலீஸ் . ஒரு வாரமாக குலாப் ஜாமூன் ஜீராவை காதில் ஊற்றுவது போல அங்க 100 கோடி வசூல் இங்க 100 கோடி வசூல் என்று சொல்கிறார்கள். கூடிய சீக்கிரம் 1000 கோடி வசூல் செஞ்சி கொடுத்துருவாரு நெல்சன்” என்று நகைச்சுவையாக பேசினார் . 

இறுதியாக பேசிய படத்தின் இயக்குநர் நெல்சன்,”ஜெயிலர் திரைப்படம் தொடங்கும்போது நான் நினைத்தை நினைத்தமாதிரியே திரையில் கொண்டுவர வேண்டும் என்று எண்ணினேன் . இப்போது இந்தத் திரைப்படத்தின் வெற்றி அதை உறுதியாக்கி இருக்கிறது . கேமராமேன் விஜய் கார்த்திக் கண்ணன் சித்த வைத்தியம் எதுவும்  சாப்பிடுகிறாரா என்று  தெரியவில்லை. அவ்வளவு எனெர்ஜிடிக்கா வேலை பார்ப்பார் . தலைவரை விதவிதமாக காட்சிப்படுத்தி அசத்திட்டார். அதேபோல் இந்த படத்திற்கு அதிக மணிநேரம் வேலை பார்த்தது எடிட்டர் நிர்மல். படம் வெளியான பிறகும் கூட  2 நாள் ப்ரோமோ கட் வேலைகளில் இருந்தார் .

நெல்சன்

ஹுக்கும் பாடல் கேட்டுவிட்டு ‘எந்த ஊர் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் இதை எழுதினார் ‘ என்று அனிருத்திடம் கேட்டேன் . அந்த அளவிற்கு வரிகள் பிரமாதமாக எழுதி இருந்தார் சூப்பர் சுப்பு . கலாநிதி மாறன் சார் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். அவர் முழு கதை கேட்கமாட்டார் ஒன்லைன் மட்டும் சொல்லுவோம் என்று நினைத்தேன். ஆனால் நாம் 5 மணிநேரம் கதை சொன்னாலும் தொய்வடையாமல் கேட்பார். ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கும்போது ஒரு பட்ஜெட் இருந்தது முடியும் போது வேற ஒரு பட்ஜெட்டில் வந்து முடிந்தது . மனசுக்குள்ள மட்டும் என்னை திட்டிக்கொண்டு அதனை  வெளிக்காட்டாமல் முழு ஒத்துழைப்பு கொடுத்த சன் பிக்சர்ஸ்க்கு மிக்க நன்றி .

ஜெயிலர் திரைப்படம் தமிழ்நாடு தாண்டி பல ஊர்களில் வெற்றியடைய காரணம் ரஜினி சார்தான். படம் வெளியாக 3 நாட்களுக்கு முன்பு அவருக்கு தனியாக படம் போட்டு காட்டினோம் . நீங்க எதிர்பார்த்தது போல் வந்துருக்கிறதா ?” என்று கேட்டேன்.

Jailer thanks meet

‘நான் எதிர்பார்த்ததை விட 10 மடங்கு நல்லாவே வந்துருக்கிறது’ என்றார். எல்லா விதத்திலும் ஒத்தழைப்பு கொடுத்துவிட்டு இப்போ ஹிமாலயாஸ் சென்றுவிட்டார். சீக்கிரம் வாங்க சார் உங்களை நேரில்  பார்த்து மீண்டும் நன்றி சொல்ல வேண்டும்” என்றார் நெல்சன்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.