உலகின் மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தியாளரான மஹிந்திரா நிறுவனம் பயணிகள் வாகனம் மட்டுமல்லாது விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை தயாரிக்கும் ஒரு முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது தென்னாப்பிரிக்காவில் பியூச்சர்ஸ்கேப் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அங்கு தனது பல்வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வரிசையில் புதிதாக மஹிந்திரா ஓஜா வகை டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓஜா என்பது சமஸ்கிருதத்தில் இருக்கும் ஓஜாஸ் என்ற சொல்லில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஓஜாஸ் என்றால் ஆற்றல்களின் இருப்பிடம். இலகுரக நான்கு சக்கர வாகனமான இதை ஜப்பானின் மிட்சுபிஷி மஹிந்திரா அக்ரிகல்ச்சர் மெஷினரியுடன் இணைந்து உருவாக்கியுள்ளது மஹிந்திரா. இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த ஓஜா வகை டிராக்டர்கள் விரைவில் ஆறு கண்டங்களில் உள்ள நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
ஓஜா வாகனங்களில் மட்டும் மஹிந்திரா கிட்டத்தட்ட ரூ.1,200 கோடி முதலீடு செய்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் குறைந்த எடை கொண்ட ஓஜா 2127 மற்றும் ஓஜா 3140 ஆகிய இரண்டு குறைந்த எடை கொண்ட டிராக்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஓஜா 2127 என்ற டிராக்டர் ரூபாய் 5.64 லட்சம் என்ற விலையிலும் ஓஜா 3140 என்ற டிராக்டர் ரூபாய் 7.35 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது. இந்த டிராக்டர்கள் அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த விலையிலும் அதே நேரம் அதிக அம்சங்களுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஓஜா பிளாட்பார்மல் தயாரிக்கும் அனைத்து டிராக்டர்களும் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட உள்ளது. இதன் இன்ஜின் திறன் 20 எச்பி முதல் 40 எச்பி வரை இருக்கும் படி டிசைன் செய்துள்ளது. இதில் ஒவ்வொரு டிராக்டர்களும் ஒவ்வொரு விதமான விவசாய பணிகளுக்கு பயன்படுத்தும் படி வகையில் உருவாக்கப்பட உள்ளது.