புதுடெல்லி: சிஏஜிக்கு உரிய தகவல் தராததுதான் துவாரகா விரைவுச் சாலை அமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.251 கோடி செலவு செய்யப்பட்டதாக அறிக்கை வெளியாகக் காரணம் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துவாரகா விரைவுச் சாலை செலவு தொடர்பாக சிஏஜி வெளியிட்ட அறிக்கையை அடுத்து, இந்தத் திட்டத்தில் மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதையடுத்து, இது தொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் வியாழக்கிழமை உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது தொடர்பாக அமைச்சக தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம்: “துவாரகா விரைவுச் சாலை அமைக்கப்பட்டதில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை. மாறாக, சிஏஜி-க்கு போதுமான தகவல்களை நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் வழங்காததே இந்த சர்ச்சைக்குக் காரணம் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் கட்கரி மிகுந்த வருத்தமடைந்தார். இதற்குக் காரணமானவர்கள் யாரோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். துவாரகா விரைவுச் சாலை என்பது 5 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்டது. பாரத்மாலா திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் இந்தத் திட்டத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.91 ஆயிரம் கோடி ஆகும் என மதிப்பிடப்பட்டது. நெடுஞ்சாலை மட்டுமல்லாது, மேம்பாலங்கள், சுற்றுச்சாலைகள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
துவாரகா விரைவுச் சாலை ஹரியாணாவிலும் செல்கிறது. இங்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.251 கோடி செலவிடப்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.18.2 கோடி என்ற சராசரி தொகையைவிட இது பல மடங்கு அதிகமாக செலவிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிஏஜி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், ஹரியாணாவில் அமைக்கப்பட்ட துவாரகா விரைவுச் சாலையில் கட்டப்பட்ட மேம்பாலங்கள், சுற்றுச்சாலைகள் ஆகியவற்றுக்கு ஆன செலவை சிஏஜி கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. துறை அதிகாரிகள் உரிய செலவு ஆவணங்களை வழங்காததே இதற்குக் காரணம். ஹரியாணாவில் போடப்பட்ட சாலைக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.206.39 கோடி என்ற சராசரி மதிப்பீட்டின் கீழ் 4 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. எனினும், ரூ.181.94 கோடி மதிப்பில் சாலை அமைக்கப்பட்டது. இதன்மூலம், 12 சதவீதம் செலவு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது” என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.