‘கடந்த ஒன்பது ஆண்டுக்காலமாக அப்பழுக்கற்ற ஆட்சியை பா.ஜ.க அரசு கொடுத்துக்கொண்டிருக்கிறது’ என்று மேடைக்கு மேடை பேசிவருபவர் பிரதமர் மோடி. பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணியை ஏற்படுத்தியவுடன், ‘ஊழல்வாதிகளெல்லம் ஒன்றுகூடியிருக்கிறார்கள்’ என்று கேலி செய்தவர் மோடி.

இன்றைக்கு, மோடி தலைமையிலான ஆட்சியில் ஏழு திட்டங்களில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக, சமீபத்தில் வெளியான மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (சி.ஏ.ஜி) அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது, மோடி அரசுக்கு எதிராகப் புயலைக் கிளப்பியிருக்கிறது.
ஏற்கெனவே, மோடி ஆட்சியில் ஒரு ஊழல்கூட நடக்கவில்லை என்று பா.ஜ.க-வினர் பெருமை பேசினாலும், பி.எம் கேர்ஸ் நிதி, தேர்தல் பத்திரங்கள், ஹிண்டன்பர்க் அறிக்கை ஆகியவை தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கும், எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கும், பா.ஜ.க-வினர் உரிய பதிலை அளிப்பதில்லை. எதிர்க்கட்சிகளை ஊழல்வாதிகள் என்று குற்றம்சாட்டும் பிரதமர் மோடி, தன்னுடைய அரசாங்கம்மீதான இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொன்னதே இல்லை.

இந்த நிலையில்தான், மத்திய அரசின் ஏழு திட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சமீபத்தில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கை கூறியிருக்கிறது. மத்திய அரசின் பாரத் மாலா திட்டம், துவாரகா விரைவுப்பாதை திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்கிறது சி.ஏ.ஜி அறிக்கை.
பாரத் மாலா திட்டம் தொடர்பான ஏலத்தில் முறைகேடு நடந்திருக்கிறது. துவாரகா விரைவுப்பாதை கட்டுமானத்தில் ஒரு கி.மீ-க்கு ரூ.18 கோடி என்று நிர்ணயிக்கப்பட்ட திட்டச்செலவு, ரூ.250 கோடியாக அதிகரித்திருக்கிறது… சுங்கச்சாவடிகளில் விதிமுறைகளை மீறி ரூ.132 கோடி வசூலிக்கப்பட்டிருக்கிறது… ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஏழுரை லட்சம் பயனாளிகளின் விவரங்கள், ஒரே தொலைபேசி எண்ணில் இணைக்கப்பட்டிருக்கின்றன…
அயோத்யா மேம்பாடு திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன… கிராமப்புற மேம்பாடு அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டத்துக்கான பணம், மத்திய அரசின் விளம்பரங்களுக்காக செலவழிக்கப்பட்டிருக்கிறது… ஹெச்.ஏ.எல் விமான இன்ஜின் வடிவமைப்பில் தவறு ஏற்பட்ட வகையில் ரூ. 154 கோடி நட்டம்.. என்று சி.ஏ.ஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

சி.ஏ.ஜி அறிக்கை வெளியானவுடன், பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் களமிறங்கிவிட்டனர். ‘எதிர்க்கட்சிகளைப் பார்த்து ஊழல்வாதிகள் என்று குற்றம்சாட்டிவரும் பிரதமர் மோடி அவர்களே, சி.ஏ.ஜி அறிக்கை குறித்து இப்போது வாய்திறங்களேன்’ என்று எதிர்க்கட்சியினர் ஆவேசம் காட்டுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், ‘பிரதமர் மோடிக்கு தனது அரசைப் பார்த்து கேள்வி கேட்கும் துணிச்சல் இருக்கிறதா… தனது அமைச்சர்களைப் பார்த்து அவர்களின் ஊழல் பற்றியும், செயலற்றத் தன்மை பற்றியும் கேள்வி கேட்க பிரதமருக்கு துணிச்சல் இருக்கிறதா… மோடி ஆட்சியின் ஊழல்களை சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது’ என்று விமர்சித்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘உள்கட்டமைப்புத் திட்டங்களில் மோடி அரசு ஊழல் செய்திருக்கிறது. எதிர்க்கட்சிகள்மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்வதற்கு முன்பாக, பிரதமர் மோடி தன்னை முதலில் பார்க்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். ‘கடந்த 75 ஆண்டுகளில் நடைபெற்ற ஊழல்கள் அனைத்தையும் மோடி தலைமையிலான அரசு முறியடித்துவிட்டது’ என்று விமர்சித்திருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

‘பாரத் மாலா திட்டத்தில் ரூ.7.5 லட்சம் கோடி அளவுக்கு மோடி அரசு ஊழல் செய்திருக்கிறது. எனவே, தனது அரசு ஊழலை ஒழிக்க உறுதிபூண்டிருக்கிறது என்று பேசுவதை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும்’ என்று ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி-யான சஞ்சய் சிங் கூறியிருக்கிறார்.
2-ஜி ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்ஷ் ஊழல் என புற்றீசல்போல கிளம்பிய ஊழல் குற்றச்சாட்டுகள்தான் 2004 முதல் 2014 வரை பத்தாண்டு காலம் நடைபெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு முடிவுரை எழுதின. அதற்கு சற்றும் சளைக்காத வகையிலான, சொல்லப்போனால் அவற்றை விஞ்சும் வகையிலான ஊழல் குற்றச்சாட்டுகள் மோடி அரசுக்கு எதிராக தற்போது எழுந்திருக்கின்றன.

அன்றைக்கு ஐ.மு கூட்டணி அரசுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். இந்தியா முழுவதும் அதன் தாக்கம் மிகப்பெரிய அளவுக்கு இருந்தது. ஆனால், இன்றைக்கு பாஜ.க அரசுக்கு எதிராக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளை வைத்து, ட்விட்டர் எக்ஸில் போஸ்ட் போட்டால்போதும் என்று எதிர்க்கட்சிகள் கருதுவதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தீவிரமாகக் கையிலெடுத்து, பூதாகரமாக்கும்போது மத்திய பா.ஜ.க அரசுக்கு நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs