புதுடில்லி:தலைநகர் டில்லியில் இருந்து மஹாராஷ்டிர மாநிலம் புனே மாநகருக்கு, நேற்று புறப்பட தயாராக இருந்த தனியார் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, பயணியர் அனைவரும் இறக்கி விடப்பட்டு, விமானம் முழுதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
புதுடில்லியில் இருந்து மஹாராஷ்டிர மாநிலம் புனே மாநகருக்கு தனியார் நிறுவன ‘யு.கே. 971’ என்ற விமானம் நேற்று காலை 8:30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. ஆனால், காலை 7:38 மணிக்கு புதுடில்லி சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த ஒருவர், ‘விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ‘யு.கே. 971’ விமானத்தில் மூன்று வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும், ஒரு மணி நேரத்துக்குள் அவை வெடித்து விடும் என்றும் கூறி விட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார்.
இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் பரபரப்பு அடைந்தனர். சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே, சுறுசுறுப்படைந்த சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள், அந்த விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதில் இருந்த அனைத்து பயணியரும் இறக்கி விடப்பட்டனர். வெடிபொருள் கண்டறியும் கருவிகள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டன.
விமானம் முழுதும் அங்குலம் அங்குலமாக சல்லடை போட்டு சோதனை நடத்தப்பட்டது.
பயணியரின் உடைமைகளும் மீண்டும் சோதனைக்கு அனுப்பப்பட்டன.
ஆனால், வெடிபொருட்கள் எதுவும் அந்த விமானத்தில் இல்லை. இதையடுத்து, புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தாமதமாக அந்த விமானம் புனே நகருக்கு புறப்பட்டுச் சென்றது.
இதுகுறித்து, விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement