வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் இந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியைத் தேர்வுக்குழுவினர் அறிவித்திருந்தனர். குறிப்பாக காயத்திலிருந்து குணமடைந்துள்ள கே.எல்.ராகுல் இந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் காயத்திலிருந்து மீண்டு வந்திருந்தாலும் இன்னும் முழு உடல் தகுதி பெறவில்லை.

இதன் காரணமாக ராகுல் முதல் இரண்டு போட்டிகளைத் தவற விடுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் ராகுலுக்கு பேக்அப் வீரராக சஞ்சு சாம்சன் அணியுடன் பயணிப்பார் என்றும் கூறப்பட்டு வந்தது. இதற்கு இந்திய முன்னாள் வீரரும் இந்தியத் தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
கே.எல் ராகுலின் தேர்வு குறித்துப் பேசிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், “ கே.எல் ராகுலுக்கு பேக்கப் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு வீரர் முழுவதுமாக உடற்தகுதி பெறாமல் இருந்தால் நாங்கள் தேர்வு செய்யமாட்டோம். அன்று இதுதான் எங்கள் தேர்வு குழுவின் கொள்கையாக இருந்தது. ஒரு வீரருக்கு உடல்தகுதி இல்லை என்றால் அவர்களைத் தேர்வு செய்ய வேண்டாம். நீங்கள் அவரை உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்ய விரும்பினால், அவரை உலகக் கோப்பைக்குக் கூட தேர்வு செய்யுங்கள், அது வேறு விஷயம்.

ஆனால் இப்படிப்பட்ட ஒரு வீரருக்கு சஞ்சு சாம்சனை மாற்றாக கூட்டிக்கொண்டு போகிறார்கள். இது என்ன மாதிரி என்று புரியவில்லை. தற்போது உள்ள தேர்வுக்குழு தங்களுக்கென்று சில தேர்வுக் கொள்கையை வைத்திருக்க வேண்டும். நான் இதில் எந்த கிரெடிட்டையும் எடுத்துக் கொள்ள முயற்சிக்கவில்லை. நாங்கள் எப்படி செயல்பட்டோம் என்பதை மட்டுமே சொல்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
ஸ்ரீகாந்த்தின் இந்த விமர்சனம் குறித்த உங்களது கருத்தைப் கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்!