சிங்கப்பூர், சிங்கப்பூரில் அரசு அதிகாரியை தாக்கிய இந்திய வம்சாவளி பெண்ணிற்கு 18 வாரங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெற்காசிய நாடான சிங்கப்பூரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாந்தி கிருஷ்ணசாமி, 58, என்பவர் தன் மகன் கவின் சரங்ஷின்னுடன் வசித்து வருகிறார்.
சிங்கப்பூரில் வசிக்கும் இளைஞர்கள், ராணுவ பயிற்சி மையத்தில் இணைந்து தேசிய சேவையாற்றுவது கட்டாயம் என்ற விதி உள்ளது.
இந்நிலையில், சாந்தியின் மகன் கவின், 2021ல் ராணுவ பயிற்சியில் சேர தவறி உள்ளார். இது குறித்து விசாரிக்க, சிங்கப்பூர் மனிதவள துறையின் இன்ஸ்பெக்டர் ஒருவர், சாந்தியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த அதிகாரியிடம், சாந்தி ஆவேசமாக பேசியதுடன் சரமாரியாக அடித்து விரட்டியுள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அதிகாரி அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சம்பவம் நடந்த போது அதிகாரியின் உடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, சாந்தியை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை, மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் கோ முன்னிலையில் நடந்த நிலையில், நேற்று அரசு அதிகாரியை தாக்கிய சாந்திக்கு 18 வாரங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
எனினும், சாந்தி தன் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துஉள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement