மக்களே, இரண்டு மாதங்களில் பள பளக்கும் சாலைகள்: ஸ்டாலின் வைத்த டார்கெட்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர்

ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் பேசிய முதல்வர், நானும் இதே டெல்டா மாவட்டத்துக்காரன் தான். அந்த வகையில், தமிழ்நாட்டு முதலமைச்சராக மட்டுமில்லை, இந்த டெல்டா மாவட்டத்தின் பிரதிநிதி என்கின்ற உணர்வோடும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளேன் என்று குறிப்பிட்டார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் இந்த மாவட்டங்களில் சிறப்பான முறையில், எந்த ஒரு தொய்வும் இல்லாமல் செயல்படுத்தப்படவேண்டும். 100 நாள் வேலை உறுதி திட்டத்தின்கீழ் வேலை வழங்கக் கூடிய சராசரி நாட்களை உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை இந்த மாவட்டங்களில் மேற்கொள்ளவேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.

வேளாண் சாகுபடி பரப்பு குறைந்து கொண்டு வருகின்ற வட்டாரங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி வேளாண் பொருட்களின் உற்பத்தியை பெருக்குவதற்கு உடனடி முயற்சிகள் தேவை.காய்கறிகள் மற்றும் கனிகள் உற்பத்தி பெருக்கத்திற்கும் உரிய நடவடிக்கை எடுங்கள். தென்னை மரங்களின் பரப்பை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள உடனடியாக செய்யுங்கள் என்று கூறிய அவர், உற்பத்தி அதிகரித்தால் மட்டும் போதாது. விளை பொருள்களுக்கான உரிய சந்தை விலையும் உழவர்களுக்குக் கிடைக்கவேண்டும். உழவர்கள் தங்களுடைய விளைபொருட்கள் லாபகரமான முறையில் விற்பனை செய்வதற்கு வேண்டிய e-NAM (இ-நாம்) உள்ளிட்ட சந்தை வசதிகளை பெருக்க வேண்டும் என்றும் கூறினார்.

சில துறை சார்ந்து கவனிக்க வேண்டிய விஷயங்களை நினைவூட்டுகிறேன். நகர்ப்புற சாலைப் பணிகளில் திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் முன்னேற்றம் இல்லை என்று ரிப்போர்ட் சொல்கிறது. பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரையில், பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டம் கடைசியாக இருக்கிறது. இது கவலைக்குரியது. இதை அடுத்த ஆண்டுக்குள் மாற்றியாக வேண்டும் இவை இரண்டிலும் மாவட்ட ஆட்சியர்கள் அதிக அக்கறை காட்டவேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார்.

தொடர்ந்து மக்களிடம் சென்று, அவர்களோடு இருந்து அவர்களின் பிரச்சனைகளை சரி செய்து, தேவைகளை நிறைவேற்றி, நமது அரசுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் உரிய மனநிறைவு கிடைக்கும் வகையில் செயல்படுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் சிறப்பான செயல்பாட்டுக்கு இந்த அரசு எப்போதும் துணை நிற்கும். அதிகாரிகளும் – அமைச்சர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதும் – மாவட்ட அலுவலகங்களும் – தலைமைச் செயலகமும் ஒருங்கிணைந்து செயல்படுவதும் தான் நல்லாட்சியின் இலக்கணம்.நாம் அனைவரும் “மக்கள் சேவகர்கள்” என்பதை மனதில் வைத்து செயலாற்றுவோம் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.