மும்பை: மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவே பாஜக மற்றும் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி கூட்டணியில் இணைந்துள்ளதாக மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார், பாஜகவோடு கூட்டணி அமைத்து அம்மாநில துணை முதல்வராக பதவியேற்றார். அவரோடு, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதையடுத்து, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு இருதரப்பும் உரிமை கோரின. எனினும், இந்த சம்பவங்களை அடுத்து சரத் பவாரை, அஜித் பவார் நேரில் சந்தித்துப் பேசி இருந்தார். இந்த சூழலில் அஜித் பவார் தெரிவித்தது…
“மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவே பாஜக மற்றும் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி கூட்டணியில் இணைந்துள்ளோம். மாநில வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவு இது. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை. அனைத்து சாதி மற்றும் மதத்தை சார்ந்த மக்களை காப்பது தான் நமது பணி என்பதை மகாராஷ்டிராவில் உள்ள அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்” என அஜித் பவார் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்புகின்றன. வெங்காயம் சார்ந்த சிக்கல் எழுந்தபோது தனஞ்செய் அவர்களை டெல்லிக்கு நான் அனுப்பினேன். சிக்கலை தீர்க்க உதவி கோரினோம். உள்துறை அமைச்சர் அமித் ஷா மூலம் அதற்கு தீர்வு காணப்பட்டது எனவும் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.