உங்களுக்கு தகுதி இருக்கா? பாஜக எவ்ளோ ஊழல் பண்ணிருக்கு தெரியுமா? புட்டு புட்டு வைத்த ஸ்டாலின்

முதலமைச்சர்

டெல்டா மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன் தினம் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த திருக்குறவளையில் காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல்வர், நேற்று நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்ட அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அத்துடன், காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தினையும் பார்வையிட்டார்.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகை மக்களவை உறுப்பினர் எம்.செல்வராஜின் மகள் செல்வப்பிரியா – விக்னேஷ் ஆகியோரது திருமணத்தை நாகையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, டி.ஆர்.பி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய முதல்வர், “மக்களவைத் தேர்தலை எதிர்நோக்கி காத்துள்ளோம். இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். சர்வாதிகார, பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிற பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனெனில் தமிழ்நாட்டை காப்பாற்றி விட்டோம். இந்தியாவை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம். வரவுள்ள 2024 மக்களவைத் தேர்தலில் தற்போது உள்ள கூட்டணி தொடர்ந்து நீடிக்கும், அதை நான் உறுதியாக சொல்கிறேன்.

இந்தியாவை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம், அதற்காக தான் INDIA கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி உருவானதை பிரதமர் மோடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் மற்ற நிகழ்ச்சிகளிலும் இந்தியா கூட்டணியை விமர்சிக்கிறார். குறிப்பாக

ஆட்சியை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். அதாவது தமிழ்நாட்டில் ஊழல் வந்துவிட்டதாம். ஊழலை நான் ஒழித்தே தீருவேன் என்று மோடி பேசுகிறார்” என்றார்.

ஊழலை பற்றி பேச பிரதமருக்கு என்ன தகுதி உள்ளது என்று கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், “பாஜக ஆட்சி ஊழல் ஆட்சி என்பது சிஏஜி அறிக்கையின் மூலம் வெளிவந்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சிகிச்சை பெற்ற 88,780 பேர் பலியாகிவிட்டனர். ஆனால், அதற்குப் பிறகும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மோசடி செய்யப்பட்டுள்ளது. துவாரகா விரைவு நெடுஞ்சாலை திட்ட செலவு ஒரு கிலோ மீட்டருக்கு 18 கோடியாக இருந்ததை ரூ.250 கோடியாக உயர்த்தி ஊழல் செய்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள 600 சுங்கச் சாவடிகளில் 5 இல் மட்டும் ஆய்வு செய்தபோது 132 கோடி ஊழல் அம்பலமாகியுள்ளது. அதில் பரனூர் சுங்கச் சாவடியும் ஒன்று.

நாடு முழுவதும் ஆய்வு செய்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தெரியவரும் என சிஏஜி அறிக்கை கூறியுள்ளது. பாரத்மாலா, சுங்கச்சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட 7 திட்டங்களில் மோசடி நடைபெற்றுள்ளது. இந்த நிலையில்தான் ஊழலை மறைப்பதற்காக மத்திய பாஜக அரசு மதத்தை கையில் எடுத்துள்ளது” என்று கடுமையாக சாடினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.