டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடும் சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டியில் இதுவரை அவரால் விளையாட முடியவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் இதுவரை சிறப்பாக இல்லை. 50 ஓவர் வடிவத்தில் 26 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கும் அவர், 511 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இருந்தபோதிலும், அணி நிர்வாகம் அவர் மீது மிகுந்த நம்பிக்கையை கொண்டிருக்கிறது. அதனால் தான் அவர் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வாசிம் ஜாபர் சொன்ன அறிவுரை
சூர்யகுமார் யாதவ் இதுவரை ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்காக மூன்று, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்துள்ளார். ஆனால் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் அவருக்கு ஒரு அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார். சூர்யகுமார் யாதவ் தனது சிறந்த கிரிக்கெட்டை விளையாட ஒருநாள் போட்டிகளில் ஆறாவது இடத்தில் விளையாட வேண்டும் என்று தெரிவித்திருக்கும் வாசிம் ஜாஃபர், அவர் விளையாடும் அதிரடி பேட்டிங்கிற்கு அந்த இடம் தான் சரியாக இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார். டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவதைப் போலவே ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாது என்றும், இதன் காரணமாகவே அவர் இந்த வடிவத்தில் வெற்றிபெறவில்லை என்றும் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.
இந்திய அணி நிர்வாகமும் அவரை 6வது இடத்தில் விளையாட வைக்க பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டியில் வெற்றிபெறும் வகையிலான ஆட்டம் கொண்டவர் என்று வாசிம் ஜாஃபர் கூறினார். அவர் எனது கேப்டன்சியின் கீழ் விளையாடி என் முன் அறிமுகமானார் என்று தெரிவித்திருக்கும் ஜாபர், அவர் திறமைக்கு பஞ்சமில்லை, ரஞ்சி டிராபியில் நான்காவது இடத்தில் விளையாடி இருக்கிறார் என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, அவர் நான்காவது இடத்தில் விளையாடப் பழகிவிட்டார், அதன்பிறகு அவரது ஆட்டம் முற்றிலும் மாறினாலும், அவர் எப்போதும் ஒரு டைனமிக் வீரராகவே இருந்து வருகிறார். சூர்யகுமார் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கு மாறுவது கடினம் என்று நினைக்கிறேன் என்றும் ஜாபர் கூறியுள்ளார்.
50 ஓவர் வடிவத்தில் ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்வது அவருக்கு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆறாவது இடத்தில் வருவதால், அவர் விளையாட விரும்பும் கிரிக்கெட்டை விளையாடலாம் மற்றும் ஒரு ஃபினிஷராக இருக்கலாம். இருப்பினும், ஹர்திக் பாண்டியா அந்த இடத்தில் பேட் செய்வதால் சூர்யகுமார் ஒருநாள் போட்டிகளில் ஆறாவது இடத்தைப் பெறுவது கடினம். ஸ்ரேயாஸ் ஐயர் நான்காவது இடத்தில் விளையாடுவார் என்பதால் மற்ற அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன என கூறியுள்ள ஜாபர், இனி வரும் வாய்ப்புகளிலும் சூர்யகுமார் யாதவ் சொதப்பினால் ஒருநாள் போட்டிகளில் அவருடைய இடத்தை இழக்க நேரிடும். அவருக்கு பதிலாக திலக் வர்மா இடம்பெறக்கூடும் என எச்சரித்துள்ளார்.