லக்னோ: உத்தர பிரதேசத்தின் முசாபர் நகரில் நேகா பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் தனியார் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியை திருப்தா தியாகி என்ற பெண் ஆசிரியை நடத்தி வருகிறார். இவர் மாற்றுத் திறனாளி ஆவார்.
கடந்த 24-ம் தேதி ஆசிரியை திருப்தா தியாகி, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். அப்போது 7 வயது சிறுவனிடம் அவர் கணித வாய்ப்பாடு சொல்லுமாறு கூறினார். அந்த சிறுவனால் வாய்ப்பாட்டை சரியாக சொல்ல முடியவில்லை. ஆத்திரமடைந்த ஆசிரியை, சக மாணவர்களை அழைத்து அந்த மாணவரை கன்னத்தில் அறையுமாறு கூறினார். இதன்படி சக மாணவர்கள், வாய்ப்பாடு கூற முடியாத மாணவரின் கன்னத்தில் அறைந்தனர்.
சிறுவன் வலியால் அழுதபோது குறிப்பிட்ட மதத்தினை சுட்டிக் காட்டி, அந்த சமூக பெண்கள் குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்தாததால் அவர்களின் குழந்தைகள் கல்வியில் பின்தங்கி இருப்பதாக ஆசிரியை திருப்தா தியாகி குற்றம் சாட்டினார்.
இந்த சம்பவத்தை சிறுவனின் உறவினர் ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். தற்போது வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதை ஆதாரமாக வைத்து ஆசிரியை திருப்தா தியாகி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியை திருப்தா தியாகி கூறும்போது, “நான் மாற்றுத் திறனாளி. என்னால் எழுந்து செல்ல முடியாததால், சரியாக பாடம் படிக்காத மாணவனை, சக மாணவர்கள் மூலம் தண்டித்தேன். வீடியோவை திரித்து வெளியிட்டு என் மீது பழி சுமத்துகிறார்கள்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜுன கார்கே, அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்டோர், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வெறுப்புணர்வு அரசியலின் விளைவாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
உ.பி. காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா ஸ்ரீநாத் கூறும்போது, “பள்ளி சிறுவன் கன்னத்தில் அறையப்படும் வீடியோவை முடக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தவறிழைத்த ஆசிரியை மதவாதத்தை தூண்டுகிறார். ஆசிரியர்களை நம்பியே பிள்ளைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புகின்றனர். அந்த நம்பிக்கையை திருப்தா பொய்யாக்கி இருக்கிறார். அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.