புதுடில்லி, உய்கர் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை, திபெத், தைவான் போன்ற பக்கத்து நாடுகளை கைப்பற்றும் முயற்சி ஆகிய விவகாரங்களால், நம் அண்டை நாடான சீனாவுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசின் பல அதிரடி நடவடிக்கைகளால், அந்நாடு கிழக்கு லடாக் பகுதியில் இருந்து படைகளை திரும்பப் பெறும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு மே மாதத்தில், கிழக்கு லடாக்கின் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. இதை, நம் படைகள் தடுத்து நிறுத்தின.
அந்தாண்டு ஜூன் மாதத்தில், இரு நாட்டு வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, எல்லையில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டன.
பல சுற்று பேச்சுகள் நடந்த பின்,எல்லையில் சில இடங்களில் இருந்து இரு நாட்டு படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன.
பயங்கரவாத நடவடிக்கை
அதே நேரத்தில் தொடர்ந்து சில இடங்களில் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், இரு நாட்டுக்கும் இடையேயான உறவும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில், ‘பிரிக்ஸ்’ அமைப்பின் மாநாடு சமீபத்தில் நடந்தது.
இந்த மாநாட்டுக்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் சந்தித்து பேசுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. அரசு முறை பேச்சு எதுவும் நடக்கவில்லை.
அதே நேரத்தில், இரு தலைவர்களும் சில நிமிடங்கள் தனியாக சந்தித்து பேசினர்.
அப்போது, எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்தில் சீனா உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து வெளியுறவுத் துறை நிபுணர்கள் கூறியுள்ளதாவது:
நம் அண்டை நாடுகளுடனான உறவுகள் விஷயத்தில் மத்திய அரசு மிகவும் தெளிவாக உள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தாதவரை, பாகிஸ்தானுடன் எந்த வகையிலும் உறவு கிடையாது என்பதில் உறுதியாக உள்ளது.
சீனாவுடனான உறவு ஓரளவுக்கு சிறப்பாக இருந்தது. ஆனால், கிழக்கு லடாக்கில் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து, மத்திய அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.
பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் நம்மை இத்தனை ஆண்டுகளாக மிரட்டி வந்தன.
மிரட்டல்
இது போன்ற மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
அதுபோல, நாட்டை பாதுகாக்க தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
எல்லைப் பகுதியில் புதிய பாலங்கள், சாலைகள், ஹெலிபேட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
நம் படைகள் விரைவாக எல்லைக்கு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
கிழக்கு லடாக்கில் மட்டுமல்லாமல், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் போன்ற மாநிலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இது ஒரு பக்கம் இருக்க, மத்திய அரசு மற்ற நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக சீனாவுக்கு உலக நாடுகளில் இருந்து கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
ஏற்கனவே உய்கர் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையில், சீனாவுக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
திபெத், தைவான் நாடுகளை கைப்பற்ற துடிக்கும் சீனாவின் முயற்சிக்கும் எதிர்ப்பு உள்ளது.
இதே போல தென் சீனக் கடல் பகுதியை முழுதுமாக ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சிக்கும், அப்பகுதியில் உள்ள ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், சீனாவுக்கு எதிரான அனைத்து நாடுகளின் நன்மதிப்பை நம் நாடு பெற்றுள்ளது.
சர்வதேச அளவிலும் நம் நாட்டுக்கென தனி மரியாதை உருவாக்கப்பட்டுஉள்ளது. இதையடுத்து, சர்வதேச அளவில் சீனாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சீனா – பாகிஸ்தான் பொருளாதார பெருவழி சாலை திட்டம் பின்னடைவை சந்தித்துள்ளது.
பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளை அடிமைப்படுத்தும் வகையில் சீனாவின் நடவடிக்கைகள் உள்ளதாகவும் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு மேலும், சர்வதேச அளவில் பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க, கிழக்கு லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்தில் சீனா உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்