"பா.ஜ.க அரசு இருந்தால் பொறுப்புணர்வு இருக்கும்" என்ற அமித் ஷாவின் கருத்து சரியா? – ஒன் பை டூ

பழ.செல்வகுமார், மாநில துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க

“மாற்றிச் சொல்லியிருக்கிறார். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் எல்லாம் பொறுப்புணர்வு அல்ல… வெறுப்புணர்வுதான் அதிகம் இருக்கிறது. உதாரணமாக, மணிப்பூர் விவகாரத்தையே சொல்லலாம். அந்த மாநில அரசோ, ஒன்றிய அரசோ நினைத்திருந்தால் தொடக்கத்திலேயே மணிப்பூர் கலவரத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால், தங்களின் அரசியல் லாபத்துக்காக இரு தரப்பு மக்களிடமும் வெறுப்புணர்வை வளர்த்துவிட்டு, பெரும் சீர்குலைவை ஏற்படுத்தி, பழங்குடிகளுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது ஒன்றிய பா.ஜ.க ஆட்சிதான். உ.பி-யிலும் ஹரியானாவிலும் சிறுபான்மையினருக்கு எதிராக புல்டோசர்களை ஏவியதற்குப் பெயர்தான் பொறுப்புணர்வா… முன்பு, அவர்கள் ஆட்சியிலிருந்த கர்நாடகாவில் மத வெறுப்புணர்ச்சியைத் தூண்டிவிட்டதாலேயே மக்கள் படுதோல்வியைப் பரிசளித்தனர். பா.ஜ.க ஆட்சி நடக்கும் மாநிலங்களில் அவர்களின் சித்தாந்தத்தைப் பரப்பவே துடிப்பார்கள். அப்படி முடியாத மாநிலங்களில் ஆர்.என்.ரவி போன்ற ஆளுநர்களை அனுப்பி, ஆளும் அரசுக்குத் தேவையில்லாத குடைச்சல்களைக் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். புல்டோசர் வன்முறைகள் தொடங்கி மதக் கலவரங்கள் வரை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் எங்கெல்லாம் கால்வைக்கிறதோ அங்கெல்லாம் வெறுப்புணர்ச்சியைத்தான் ஆழமாக விதைக்கும்.’’

கரு.நாகராஜன், மாநில துணைத் தலைவர், பா.ஜ.க

“உண்மையைத்தானே சொல்லியிருக்கிறார்… பா.ஜ.க ஆட்சி நடக்கும் குஜராத் தொடங்கி பல்வேறு மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சிக்குப் பிறகு அந்த மாநிலத்தின் தன்மை ஒட்டுமொத்தமாக மாறியிருக்கிறது. மக்களின் பொருளாதார நிலையும், வாழ்க்கைத்தரமும் உயர்ந்திருக்கின்றன. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தொழில்துறை பெருமளவில் முன்னேறியிருப்பதைக் கண்கூடாகக் காணலாம். கர்நாடகாவில் தற்போது பா.ஜ.க தோல்வியடைந்திருந்தாலும், தங்கள் ஆட்சிக்காலத்தில் அந்த மாநிலத்தில் வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்காற்றியது பா.ஜ.க அரசு. மணிப்பூர் பிரச்னையில் அந்த மாநில அரசு, மத்திய அரசுடன் இணைந்து பிரச்னைக்குத் தீர்வு கண்டுவிட்டது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில், மத்திய அரசின் திட்டங்களைச் சிறப்பாக அமல்படுத்தி, மாநில மக்களின் நன்மைக்காகப் பாடுபடுகிறார்கள். ஆனால், தமிழகம் போன்ற மாநிலங்கள், திட்டமிட்டே தங்களின் அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசின் நல்ல திட்டங்களைக்கூட செயல்படுத்துவதில்லை. எனினும், அனைத்து மாநிலங்களிலும் வாழும் மக்களின் நல்வாழ்வுக்காக, பொறுப்புணர்வுடன் பல நல்ல திட்டங்களைத் தீட்டி, உடனுக்குடன் அவற்றைச் செயல்படுத்திவருகிறது மத்திய அரசு. இதைத்தான் மத்திய அமைச்சர் அமித் ஷா அப்படிச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.’’

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.