ஹைதராபாத்: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க ஊழல் தடுப்பு ஆணைய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆந்திராவில் கடந்த 2018-ம் ஆண்டு, திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ. 371 கோடி கைமாறியதில் ஊழல் நடந்ததாக முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று அதிகாலை சிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதனால் ஆந்திராவில் நேற்றுஅதிகாலை முதலே பேருந்து பணிமனைகளிலேயே நிறுத்தப்பட்டன. தமிழகம், கர்நாடகா, தெலங்கானா மாநில எல்லைகளிலேயே ஆந்திராசெல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன.திருப்பதி-திருமலை இடையேமட்டும் பேருந்து போக்குவரத்துநிறுத்தப்பட வில்லை. தெலங்கானாவில் ஜெகன் மோகனை கண்டித்து அவரது உருவ பொம்மையை தெலுங்கு தேசம் கட்சியினர் எரித்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதனால் ஆந்திராவில் நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.
முன்னதாக சந்திரபாபு நாயுடுவிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் விஜயவாடா மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி ஹிமா பிந்து, வாதங்களக் கேட்டு சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.