163 மொழிகளில் தயாராகும் ‘நான் கடைசி வரை தமிழன்’ என்ற தமிழ் திரைப்பட அறிவிப்பே ஆச்சர்யப்பட வைக்கிறது.
இந்த படத்திற்கு டி.ராஜேந்தர் இசையமைக்கிறார் என்பது கூடுதல் ஆச்சர்யம். இதெல்லாம் சாத்தியமா என்று யோசனையில் ஆழ்ந்திருக்க அதன் இயக்குநர் எம்.ஏ.ராஜேந்திரனைத் தொடர்பு கொண்டோம்.

எக்கச்சக்க நம்பிக்கையுடன் பேசுகிறார். “சீரியல் பக்கம் அதிகம் வேலை செய்திருக்கிறேன். வழக்கமான ஒரு படமாக இல்லாமல் பெரும் சாதனையோடு ஒரு படம் செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதற்காக நான் உருவாக்கிய கதை தான் ‘நான் கடைசி வரை தமிழன்’ இதற்கு நான் முதலில் தேர்ந்தெடுத்த நபர் அண்ணன் டி.ராஜேந்திரன் அவர்கள். அவர்தான் என் எண்ணத்தை புரிந்து கொண்டு இந்தப் படத்தின் இசையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அதனால் அவரைத்தான் முதலில் போய் பார்த்தேன். ரொம்ப நாட்களாகவே அவர் வெளிப்படங்களுக்கு இசையமைப்பதை நிறுத்திவிட்டார். தனக்கு உகந்த படங்களாக எதுவும் அமையவில்லை என்பதுதான் அதற்குக் காரணம்.
இந்தப் படத்தில் இருந்த தமிழன் என்ற ஒரு வார்த்தை தான் அவர் ஒப்புக்கொண்டதற்கு காரணம். என்னை மாதிரியே நீயும் பிடிவாதமாக இருக்கிறாய். அதனால் உன்னை பிடிக்கிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு டி.ராஜேந்தர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். அவர் கடைசியாக ‘பண்ணாரி அம்மன்’ படத்திற்கு 2002ல் இசை அமைத்தார். இவ்வளவு வருஷங்களுக்குப் பிறகு எனக்காக அவர் இசை அமைப்பது பெரிய விஷயமில்லையா? `நீ சொன்ன தலைப்பு, எனக்கு தந்தது மலைப்பு. தமிழன் என்றால் இனிப்பு. அதனால் உன் படத்துக்கு இசையமைக்கிறேன்’ என்றார். எனக்கு பாதி சுமை குறைந்துவிட்டது. தந்தை ஒரு விஞ்ஞானி. மகன் ஒரு ராணுவ வீரன். இருவருமே நாட்டுக்காக உயிரை தியாகம் செய்கிறார்கள். எதற்காக, ஏன் என்பதுதான் கதை.

‘அவதார் 2’ படம் 160 மொழிகளில் வெளியிடப்பட்டது. நாம் ஏன் 163 மொழியில் அதையும் மிஞ்சும் வகையில் வெளியிடக் கூடாது என்று தோன்றி விட்டது. உடனே அதற்கான வேலையில் இறங்கி விட்டேன். நிச்சயம் 163 மொழிகளில் செய்து காட்டுவோம். இதில் சிம்புவையும் பாட வைக்கிறேன் என டி.ஆர் சொல்லிவிட்டார். அதனால் இது இளைஞர் படமாகவும் மாறப்போகிறது. இப்போதே ஐந்து பாடல்களுக்கான அடித்தளம் அமைத்துவிட்டார் டி.ஆர். இப்போது நான் ஒன் லைன் தான் சொல்லியிருக்கிறேன். யாரும் வேடிக்கையாக இந்த அறிவிப்பை நினைக்க வேண்டாம். நிச்சயமாக 163 மொழிகளில் இந்தப் படத்தை வெளியிடுவோம். நடிகர், நடிகைகள் பட்டியல் விரைவில் வெளியாகும். வெகு காலத்திற்குப் பிறகு டி.ராஜேந்தரின் இசை அதகளம் ஆரம்பிக்கிறது என்றார் ராஜேந்திரன்.