காவிரி நீர் திறப்பு நிறுத்தம் | “தமிழகத்துக்கு தண்ணீர் தரும் நிலையில் கர்நாடகா இல்லை” – டி.கே.சிவகுமார்

பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீர் தரும் நிலையில் கர்நாடகா இல்லை என்று அம்மாநில துணை முதல்வரும், நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக அதிகாரிகள் சென்றுள்ளனர். காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாததால் கர்நாடகாவில் தற்போது தண்ணீர் இல்லை. இந்த உண்மையை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அவர்கள் உணர்த்துவார்கள். தண்ணீர் இல்லாததால் கர்நாடகாவில் குடிநீர் வழங்குவதுகூட சிரமமாக உள்ளது என்பதை தெரிவிப்பார்கள். தயவு செய்து குடிநீரை சேமிக்கவாவது அனுமதியுங்கள் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுப்பார்கள். தற்போது தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் செல்லவில்லை. காரணம் மழை இல்லை. மழை பொழிய எல்லோரும் கடவுளிடம் வேண்டுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 29-ம் தேதியில் இருந்து தமிழகத்துக்கு நாள்தோறும் 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட்ட கர்நாடகா தற்போது அதனை நிறுத்தி உள்ளது.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, “தமிழகத்துக்கு 177 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கப்பட்டுள்ளது. சாதாரண ஆண்டுகளில் அந்த அளவுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். இக்கட்டான நேரத்தில், பேரிடர் ஃபார்முலாவைப் பின்பற்ற வேண்டும். ஆனால் தமிழகம் தேவையில்லாமல் சிக்கலை உருவாக்குகிறது. பாஜக கூறுவது போல, கர்நாடக அரசு மகிழ்ச்சியுடன் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் காரணமாகவே தண்ணீரை திறக்கிறது. மாநில விவசாயிகளின் நலன் மற்றும் மைசூரு, பெங்களூரு மற்றும் பல மாவட்டங்களின் குடிநீர்த் தேவைகளைப் பாதுகாப்பது அரசின் கடமை. அதற்காகவும்தான் தண்ணீரை திறக்கிறோம். மாநில அரசைப் பொறுத்தவரை, நீர் கொள்கையில், குடிநீருக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதேநேரம், பயிர்களைப் பாதுகாக்க தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி ஆணையம் கூறியதால் கர்நாடக அரசு அதை செய்தது.

திமுக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியும் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. செப்டம்பர் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது. அப்போது அரசு உண்மை நிலையை எடுத்துரைக்கும். முன்னதாக, இன்று (செப்டம்பர் 12) நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் அரசு தனது நிலைப்பாட்டை முன்வைக்கும். எனது அரசாங்கம் இந்த விவகாரத்தில் அரசியலுக்கு விலைபோகாது. மேலும், மாநில விவசாயிகளின் நலனில் சமரசம் செய்யாது. ஆகஸ்ட் இறுதி வரை தமிழகத்துக்கு 86 டிஎம்சி தண்ணீர் விட வேண்டும். ஆனால் அதில் பாதிகூட நாங்கள் விடுவிக்கவில்லை” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.