“பழிவாங்கும் நடவடிக்கையாக அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை செய்கிறார்கள்” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம் வழங்கியதை முன்னிட்டு ஜெயலலிதா பேரவை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை மாட்டுத்தாவணியில் நடந்தது. இதில் கலந்துகொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நூறு சகவிகிதம் நிறைவேற்றினார்கள். ஆனால், கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்கள்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு கையளவு நிலம் தருவோம் என்று கருணாநிதி கூறினார், பின்பு அதையும் கொடுக்கவில்லை. அதுபோல் இலவச கலர் டிவி திட்டத்தில் ஐந்து முறை கொள்முதலில் வித்தியாசம் இருந்தது. இந்தத் திட்டத்துக்காக பிற துறையிலிருந்து நிதியை மடைமாற்றம் செய்தனர். அப்படியும்கூட திட்டத்தை முழுமையாக நிறைவேற்றவில்லை. 2011-ம் ஆண்டு இதைச் சட்டமன்றத்தில் பதிவுசெய்தேன். இப்படி குளறுபடியின் மொத்த அடையாளமாக தி.மு.க இருந்து வருகிறது.

ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவோம் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால், 35 சதவிகித விண்ணப்பங்களை தள்ளுபடி செய்துவிட்டனர். தற்போது, ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மட்டும்தான் வழங்குவோம் என்று கூறி, மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றனர்.
ஜெயலலிதா ஒரு கோடியே 98 லட்சம் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி வழங்கினார். அதேபோல் அனைத்து குடும்பங்களுக்கும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கினார். 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினியும் கிராமப்புறங்களில் கறவை மாடு, ஆடு வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்தினார். இப்படி பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அதேபோல் எடப்பாடியாரும் குடிமராமத்து திட்டம், ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டினைக் கொண்டு வந்தார். ஆனால், நீட் ரத்து உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தி.மு.க ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.
இன்று ஒற்றுமையாக வாழும் மக்களிடத்தில் பிளவு ஏற்படுத்தும் வகையில், உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால், இதை வேடிக்கை பார்க்கும் முதலமைச்சரோ திராவிட இயக்க தலைவர்களை ஒப்பிட்டுப் பேசுகிறார். விலைவாசியைக் குறைக்கச் சொல்லும் மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் எந்த பதிலும் சொல்லவில்லை.

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர முடியாது என அறிக்கை விடும் கர்நாடகா முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்கவில்லை.
பழிவாங்கும் நடவடிக்கையாக அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை செய்கிறார்கள். அ.தி.மு.க மாநாட்டில் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்டச் செயலாளர்களின் பணிகளை முடக்கவே சோதனை நடத்தப்படுகிறது.
சனாதனத்தை முழுமையாகத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை, அவரவருக்குத் தெரிந்த வகையில் சனாதனம் குறித்துப் பேசி வருகிறார்கள், தேர்தல் காலத்தில் மட்டுமே சனாதனம் குறித்துப் பேசப்படுகிறது, முழுமையாகத் தெரியாத உதயநிதி சனாதனத்தை ஒழிப்பேன் எனப் பேசியிருக்கிறார். அரசியல் சாசனத்தின்படி பதவிப் பிரமாணம் எடுக்கும்போது அனைத்து மக்களையும் சமமாகப் பார்ப்பேன் என்றுதான் பதவி ஏற்பார்கள். சனாதனத்தை ஒழிப்பேன் எனக் கூறியதால், மக்கள் கோபமடைந்திருக்கின்றனர். உதயநிதி அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

அ.தி.மு.க மாநாட்டைப் பார்த்து புரட்சிப் பயணம் செல்ல முயன்றவர்களுக்கு இயற்கையும், தொண்டர்களும் ஒத்துழைக்கவில்லை. புலியைப் பார்த்து எலி சூடுபோட்டுக் கொண்ட கதையாக உள்ளது. காஞ்சிபுரத்தில் மாநாடு நடைபெற்றிருந்தால், தேனிக்காரரின் மானம் கப்பலேறியிருக்கும், அங்கு கூட்டம் இல்லை.
ஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவுக்கான வளர்ச்சி பாதையாக அமையும், ஏற்கெனவே எழுத்துபூர்வமாக இதை நாங்கள் கொடுத்துவிட்டோம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY