“தமிழகத்தின் சொத்து… ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து அரசியல் செய்யக் கூடாது” – அண்ணாமலை

திண்டுக்கல்: “இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரை வைத்து அரசியல் செய்யக் கூடாது” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுகொண்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று (செப்.13) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளிடம் 5 இடங்களில் நுழைவுக் கட்டணம் செலுத்துகின்றனர். அந்த பணம் நகராட்சி மற்றும் அரசுக்கு சென்றடையாமல் வனக்குழுவுக்கு செல்கிறது. அந்த பணத்தை சரியாக கையாளுகின்றனரா என தெரியவில்லை. இதில் தமிழக அரசு தலையீட்டு வனக்குழுவுக்கு செல்லும் பணம் குறித்து வனத்துறை மூலம் வெள்ளை அறிக்கை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடைக்கானலில் நகருக்குள் நுழையும் காட்டுமாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

மலைகள் மீது இருக்கும் ஊர்களுக்கு மாநில அரசு தனியாக பட்ஜெட் ஒதுக்க வேண்டும். அப்போது தான் அங்கு இருக்கும் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியும்.ஜி-20 மாநாடு மூலம் உலகத்தின் பார்வை இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. ஜி-20 மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சிஏஜி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் புரிதல் தவறுதலாக இருக்கிறது. சிஏஜி கொடுத்த அறிக்கை ஊழலுக்கானது இல்லை. சனாதனம் குறித்து 1949-ல் இருந்து திமுக வெளியிட்ட அறிக்கைகளை விட, கடந்த 10 நாட்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை அதிகம். காரணம் அவர் அழுத்தத்தில் இருக்கிறார்.

தமிழ்நாடு பாடத்திட்டம் 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சனாதனம் குறித்து இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் பேசுவதற்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கிறது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை முதல் இரவு வரை சனாதனம் குறித்து பேசுகிறார். காரணம், முதல்வருக்கு பயம் இருக்கிறது. திடீர் என்று அரசியலுக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 43 வயதில், சனாதன தர்மத்தை வேரறுப்பேன் என கூறியுள்ளார். திமுகவைச் சேர்ந்த தலைவர்கள் 1970-ல் கூறியிருந்தால் மக்கள் பெரிதாக எடுத்திருக்க மாட்டார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. தமிழகத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியவர். அவரை வைத்து அரசியல் செய்யக் கூடாது. ஏ.ஆர்.ரஹ்மான் வேலை என்பது இசை கலை மூலம் மக்களை மகிழ்விப்பது. இசைக் கச்சேரி நடந்த இடத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் என்னுடைய வீடு. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் திட்டமிடுதல் சரியில்லை. அந்த வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். முதல்வர், பொதுமக்களுக்கு காவல் துறை சரியாக பாதுகாப்பு கொடுக்கவில்லை.

ஏ.ஆர்.ரஹ்மானை சுற்றி நடந்த விஷயங்களை தான் பாஜக குற்றச்சாட்டு வைத்தது. போலீஸார் ஏன் நிகழ்ச்சியை நிறுத்தவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சனாதன தர்மத்தை பற்றி இழிவாக பேசிய ராஜா, உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபுவை கைது செய்யாமல், முற்றுகை போராட்டத்துக்கு சென்ற என்னை கைது செய்யவில்லை என்று காவல் துறை அதிகாரிகளை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றியுள்ளனர்” என்று அண்ணாமலை கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.