புதுடில்லி,வழக்கு விசாரணைக்காக, தனக்கு பதிலாக அனுபவமற்ற தன் ஜூனியரை அனுப்பி வைத்த வழக்கறிஞருக்கு, உச்ச நீதிமன்றம் 2,000 ரூபாய் அபராதம் விதித்தது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அந்த வழக்கில் ஆஜராக வேண்டிய வழக்கறிஞர் வராமல், அவருக்கு பதிலாக தன் ஜூனியரை அனுப்பி வைத்திருந்தார்.
வழக்கில் ஆஜரான ஜூனியர், முதன்மை வழக்கறிஞர் இல்லாததால் விசாரணையை ஒத்தி வைக்கும்படி கோரினார். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், வழக்கு வாதத்தை துவக்கும்படி ஜூனியர் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.
வழக்கு தொடர்பாக தன்னிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை என அவர் கூறியதை அடுத்து, ஆத்திரமடைந்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை உடனடியாக ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.
இதையடுத்து, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக அந்த வழக்கறிஞர் ஆஜராகி, நேரில் வராததற்கு மன்னிப்பு கோரினார்.
உரிய ஆவணங்கள் இன்றி ஜூனியர் வழக்கறிஞரை அனுப்பி வைத்தது குறித்து, அவரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஒரு ஜூனியர் வழக்கறிஞர் எந்த ஆவணங்களும் இல்லாமல் வழக்கில் ஆஜராகியுள்ளார். வழக்கை ஒத்திவைக்க மறுத்ததை அடுத்து, வழக்கறிஞர் ஆஜராகிறார். இது போல் எல்லாம் வழக்குகளை நடத்த முடியாது.
இது நீதிமன்றத்துக்கு மட்டுமின்றி, ஆவணங்கள் இன்றி வழக்கில் ஆஜரான ஜூனியர் வழக்கறிஞருக்கும் தீங்கானது.
உரிய முறையில் நடந்துகொள்ள தவறிய வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் 2,000 ரூபாயை செலுத்தி, அதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்