புதுடெல்லி: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரன்களை பேட்டர் குவிப்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அதிலும், சில கிரிக்கெட்டர்களுக்கு கெமிஸ்ட்ரி ஒத்துப்போய் ரன்மழை குவித்து அசத்துவார்கள். ஒரு நாள் சர்வதேச (ODI) கிரிக்கெட்டின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று, ஜோடியாக இணைந்தால் அசரடிக்கும் பேட்டர்களின் ரன்மழை ஆகும். கிரிக்கெட்டர்களின் நம்ப முடியாத கெமிஸ்ட்ரி, ரசிகர்களுக்கு ரன் விருந்து படைத்துள்ளது.
சில பேட்டிங் பார்ட்னர்ஷிப்கள் கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத தருணங்களை உருவாக்கியுள்ளன. இந்தப் பட்டியலில், ODI கிரிக்கெட் வரலாற்றில், அதிக ரன்களைக் குவித்த அசாதரண இணைகளைப் பார்க்கலாம். பட்டியல் நீண்டு கொண்டே சென்றாலும், முதல் பத்து இடங்களில் உள்ள ஜோடிகள் இவர்கள்…
சச்சின் டெண்டுல்கர் – சவுரவ் கங்குலி
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி, 1992 முதல் 2007 வரையில் அருமையான கெமிஸ்ட்ரியுடன் விளையாடினார்கள். 176 இன்னிங்ஸ்களில் இணைந்து விளையாடிய இந்த ஜோடி 47.55 சராசரியுடன் 8227 ரன்கள் குவித்தது. டெண்டுல்கரின் நேர்த்தியும் கங்குலியின் ஆக்ரோஷமும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்தன.
குமார் சங்கக்கார -மஹேல ஜெயவர்தன
இலங்கையின் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தனே ஜோடி 2000 முதல் 2015 வரை ஒருநாள் கிரிக்கெட்டில் 151 இன்னிங்ஸ்களில் விளையாடி 5992 ரன்கள் குவித்தது. சங்கக்காரவின் கிளாசிக்கல் பேட்டிங் பாணி ஜெயவர்த்தனேவின் நேர்த்தியான ஸ்ட்ரோக்பிளேயுடன் அழகாக இணைந்தது. இருவரும் இணைந்து, 15 சதங்களையும், 32 அரை சதங்களையும் அடித்து, இலங்கையின் ODI வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தனர்.
குமார் சங்கக்கார – திலகரத்ன டில்ஷான்
இலங்கை அணியின் குமார் சங்கக்கார, ஆக்ரோஷமான தொடக்க ஆட்டக்காரர் திலகரத்ன தில்ஷானுடன் இணைந்து 2000 முதல் 2015 வரை நீடித்த ஒரு அபாரமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார். 108 இன்னிங்ஸ்களில், 53.67 என்ற சராசரியில் 5475 ரன்களைக் குவித்தது இந்த ஜோடி.