தலைநகர் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, சென்னை மாநகராட்சி, மதுரவாயல் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வரும் ஐயனார் – சோனியா தம்பதியினரின் 4 வயது மகன் ரக்ஷன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழப்பு:
மதுரவாயலைச் சேர்ந்த தம்பதிகள் தங்கள் மகனுக்கு சாதாரண காய்ச்சல் என்று நினைத்து சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். ஆனால் தொடர்ந்து இரண்டு நாட்களாக காய்ச்சல் தீவிரமடைய, சிறுவனுக்கு டெங்கு அறிகுறி இருப்பதாகவும் உடனடியாக எழும்பூர் குழந்தைகள் நலமருத்துவமனையில் சேர்க்கவேண்டும் எனவும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதன்படி, கடந்த செப். 6-ம் தேதி எழும்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் ரக்ஷன் சிகிச்சை பலனின்றி கடந்த 9-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் மனமுடைந்த சிறுவனின் பெற்றோரும் உறவினர்களும், `தங்கள் பகுதியில் நிலவும் சுகாதாரச்சீர்கேடும், அதை கண்டுகொள்ளாமல் விட்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள், பகுதி கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள்தான் இந்த உயிரிழப்புக்கு காரணம்; அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்!’ எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தடுக்க ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டாதால் மதுரவாயல் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில்சென்று பெற்றோரை சமாதானம் செய்ததுடன், அந்தப்பகுதியில் உடனடியாக சுகாதார ஆய்வையும் மேற்கொண்டனர்.
ஆணையர் அதிரடி உத்தரவு… டெங்கு ஒழிப்பு தீவிரம்:
அதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சி முழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் முயற்சியில் சென்னை மாநகராட்சி களமிறங்கியிருக்கிறது. டெங்கு தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் பானுமதி மற்றும் அனைத்து மண்டல மருத்துவ நல அலுவர்களிடமும் அவசர ஆலோசனை மேற்கொண்ட சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார்.

களத்தில் கொசு ஒழிப்பு பணியாளர்கள்… கையிருப்பில் மருந்துகள்!
அதன்படி, “சென்னையில் உள்ள சுமார் 17 லட்சம் வீடுகளின் பகுதிகளை சிறுவட்டங்களாக (Sector) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வட்டத்திற்கும் சுமார் 500 வீடுகள் கொண்ட தெருகளில் வாரந்தோறும் கொசுபுழு வளரிடங்களான, மேல்நிலை/கீழ்நிலைத் தொட்டி, கிணறு, தேவையற்ற பொருள்கள் (டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள் மற்றுமுள்ளவைகள்) ஆகியவற்றை கண்டறிந்து கொசுபுழுக்கள் இருப்பின் அதனை அழித்திட நடவடிக்கை மேற்கொள்ளவும், தற்போது கொசு ஒழிப்பு பணிக்கென 954 நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்களும், 2324 ஒப்பந்த பணியாளர்களும் மொத்தம் 3278 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், 424 மருந்து தெளிப்பான்கள், 120 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 300 ஸ்ப்ரேயர்கள், 324 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எங்கெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும்?
அரசு மற்றும் மாநகராட்சி கட்டடங்கள், புதிய கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களிலும் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட வேண்டும் எனவும், டெங்குகொசு உற்பத்தியாக கூடிய தண்ணீர் தேங்கிய இடங்களிலும், டயர்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அனைத்துபள்ளிகள், பூங்காக்கள், அரசு கட்டடங்களில் உள்ள தேவையற்ற மழைநீர் தேங்கும் பொருள்களை அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கட்டடக் கட்டுமானங்கள் நடைபெறும் இடங்களிலும் கட்டடக் கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டிருக்கின்ற இடங்களிலும், காலி மனைகளிலும் தண்ணீர் தேங்கியிருந்து அதன்மூலம் டெங்கு கொசுபுழுக்கள் உற்பத்தி இருப்பதை கண்டறியப்பட்டால் தொடர்புடையவர்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இலவச நிலவேம்பு, பப்பாளி மற்றும் மலைவேம்பு கஷாயம்:
ஒவ்வொரு மண்டலத்திலும் அரசு மருத்துவமனை, சென்னை மாநகராட்சி மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் பகுப்பாய்வு கூடங்களில் காய்ச்சல் கண்டவர்களின் விவரங்கள் தினந்தோறும் பெறப்பட்டு சம்பந்தபட்ட மண்டலங்களுக்கு உடன் அனுப்பி உரிய சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு கொசு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு சம்பந்தமான நடவடிக்கை மேற்கொள்ளவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் கண்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பகிறதா என கண்காணிக்கப்பட வேண்டும். அதிக காய்ச்சல் கண்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு இரத்த தடவல் எடுக்கப்பட்டு உரிய சிகிச்சை இலவசமாக அளிக்கபட வேண்டும். இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருந்துகளான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலைவேம்பு இலைச்சாறு போன்றவை அம்மா உணவகங்களிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பள்ளிகள் மற்றும் மருத்துவ முகாம்களிலும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

பள்ளிகள், பொதுஇடங்களில் விழிப்புணர்வு பிரசாரங்கள்:
சுகாதார ஆய்வாளர்களை கொண்டு பள்ளி இறை வணக்கத்தின் போதுபள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும். பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றியும், ஏடிஸ் கொசு உற்பத்தி பற்றியும், அது தடுக்கும் வழிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் மற்றும் துண்டறிக்கைகள் மூலம் விநியோகிக்கப் பட வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை மழைக்காலங்களில் வரக்கூடிய நோய்களை எதிர்க்கொள்ள போதிய அளவு மருந்துகள், உபகணரங்களுடன் போதுமான மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். எனவே, பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் உபயோகமற்ற டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் முதலியவற்றில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாகும் வாய்ப்புள்ளதால், அதனை உடனடியாக அகற்ற வேண்டும், மேலும், கிணறு, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுக்கள் மற்றும் கொசுப்புழு புகா வண்ணம் மூடிவைக்க வேண்டும்.

தண்ணீர் நிரப்பிய பூஜாடி மற்றும் கீழ்த்தட்டு, குளிர்பதன பெட்டியின் கீழ்த்தட்டு, மணி பிளான்ட் போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரமொருமுறை அகற்றி தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
மேலும், பருவ காலங்களில் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு நோய் இருப்பின் கண்டறிந்து மருந்துகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY