டெல்லியில் வசிக்கும் பவன் மல்ஹோத்ரா என்பவர் தெருநாயைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, போலீஸார் அவர்மீது வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். அவரது செய்கை தொடர்பான வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, விலங்கு உரிமைகள் தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர் ஒருவர் காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் அளித்திருக்கிறார். முன்னதாக, இந்தப் புகார் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்தத் தொண்டு நிறுவன உறுப்பினர்,

“குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக வீடியோ ஆதாரங்கள் கிடைத்த பிறகே, வழக்கு பதிவுசெய்ய காவல்துறையை அணுகினோம். காவல்துறையினர் கேட்ட அனைத்து விவரங்களையும் வழங்கினோம். ஆனாலும், மூத்த அதிகாரியின் தலையீட்டுக்குப் பிறகுதான், குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக ஐ.பி.சி தொடர்புடைய பிரிவுகளின்கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது. எஃப்.ஐ.ஆர் இருந்தபோதிலும், இதுவரை குற்றம்சாட்டப்பட்டவர் கைதுசெய்யப்படவில்லை” எனக் குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரம் குறித்து விலங்குகள் நல ஆர்வலர் தாரணா சிங் என்பவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசியபோது, “குற்றம்சாட்டப்பட்ட பவன் மல்ஹோத்ரா 2019-ம் ஆண்டிலிருந்து இது போன்ற செயல்களைச் செய்து வருகிறார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் அறிந்திருந்தாலும், அவர்கள் இதுவரை இதைக் கண்டுகொள்ளவில்லை. தற்போது, அவரது தவறான செயல்கள் அம்பலப்படுத்தப்பட்ட பிறகு குற்றம்சாட்டப்பட்டவரின் குடும்பம், இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, புகாரளித்தவரை தாக்கியிருக்கிறது.

பவன் மல்ஹோத்ராவின் மகனும் அவரது மற்ற குடும்ப உறுப்பினர்களும் கட்டையால் அவரைத் தாக்கி, அவரிடமிருந்து, இந்தக் கொடூரக் குற்றத்துக்கான ஆதாரமாக இருந்த செல்போனையும் பிடுங்கிக்கொண்டார்கள். ஆனால், தொண்டு நிறுவனத்தின் ஆர்வலர்கள் அவர்களிடமிருந்து அந்த செல்போனை மீட்டு, வீடியோ காட்சிகளை காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாகப் பேசிய காவல்துறை தரப்பு, “குற்றம்சாட்டப்பட்டவர்மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 268, 377, 428, 429 மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டப்பிரிவு 11 ஆகியவற்றின்கீழ் ரஜோரி கார்டன் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. வீடியோவில் குற்றம்சாட்டப்பட்டவரின் முகம் தெளிவாகத் தெரியவில்லை என்பதால், முதலில் அவரது அடையாளத்தைக் கண்டுபிடிப்போம். சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறது.

குற்றம்சாட்டப்பட்ட பி.ஆர்.மல்ஹோத்ரா, என்.சி.ஜெயின் தலைமையிலான ‘நிஸ்கம் சேவா சமிதி’ என்ற Helpful Organisation Of Humanity என்ற தொண்டு அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்திருக்கிறார். அந்த அமைப்பின் தலைவர்கள் இறந்ததைத் தொடர்ந்து, அமைப்பு செயல்படவில்லை. தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.