வாஷிங்டன்: விண்வெளி குறித்த ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, புதிதாக சூரியன் போன்ற நட்சத்திரம் பிறந்திருப்பதை புகைப்படம் எடுத்துள்ளது.
அமெரிக்க விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து 20 ஆண்டு உழைப்புக்குப் பின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கின. இந்த ‛ ஜேம்ஸ்வெப்’ தொலைநோக்கி 2021ல் விண்ணில் ஏவப்பட்டது. அப்போது முதல், சூரிய குடும்பத்திற்கு வெளியே வெகு தொலைவில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி துல்லியமாக படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வைத்து வருகிறது.
அந்த வரிசையில் ஒரு புதிய நட்சத்திரம் உருவாகி உள்ளது தெரியவந்துள்ளதை தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. அதனை நாசா வெளியிட்டு உள்ளது. அதில், ஒரு நட்சத்திரம் உடைந்து இரண்டு புதிய நட்சத்திரங்களாக உருவாகும் போது ஏற்பட்ட தீப்பிழம்பை காண்பித்துள்ளது.
நட்சத்திரங்கள் உமிழக்கூடிய வெப்பம் மற்றும் அதீத ஒளி அருகில் உள்ள வாயுக்கள் மற்றும் தூசிக்களில் பட்டு எதிரொலிக்கக்கூடிய காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இது உருவாகி சில ஆயிரம் ஆண்டுகள் தான் இருக்கும்.
சூரியன் பிறக்கும்போது எப்படி இருந்ததோ, அதை போன்ற வடிவத்தில் நட்சத்திரம் இருக்கிறது. புதிய நட்சத்திரம் முழுமையாக உருவான பின் நமது சூரியனை போன்ற தோற்றம் கொண்டதாக இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது பூமியில் இருந்து ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement