`16 வயதினிலே முதல் பரியேறும் பெருமாள் வரை!' – ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண் பெற்ற படங்கள் இவைதான்!

ஆனந்த விகடனின் திரைப்பட விமர்சனங்களும் மதிப்பெண்களும் சினிமா வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் குறிப்பிடத்தக்க ஒன்று.

2016 ஆம் ஆண்டில் நடந்த சினிமா விகடன் விருது விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு விருது வழங்கிய பிறகு பேசிய நடிகர் விஜய், “ஆனந்த விகடன் அரசியலை விமர்சனம்  செய்வார்கள். ஆனால் விமர்சனத்தில் அரசியல் செய்ய மாட்டார்கள்” என்று கூறியிருந்தார்.

விஜய், ரஜினி

அதே போல் அதே மேடையில், “ஆனந்த விகடனில் ஒரு படத்திற்கு விமர்சனம் எப்போது வரும் எப்படி வரும் என்று ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுமே காத்துக் கொண்டிருக்கும். அந்த அளவிற்கு அவர்கள் மீது மரியாதையும், நம்பிக்கையும் இருக்கிறது” என்று ரஜினிகாந்தும் பேசியிருந்தார். அந்த அளவிற்கு ஆனந்த விகடனின் மதிப்பெண் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்நிலையில், ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண் பெற்ற படங்கள் குறித்துப் பார்ப்போம்.

1977ல் வெளியான  இயக்குநர் பாரதிராஜாவின்  ’16 வயதினிலே’ திரைப்படத்துக்கு 62.5 மதிப்பெண்கள் அளித்திருந்தது விகடன். அதுவே இன்றுவரை  ஆனந்த விகடன் விமர்சனக் குழுவால் அளிக்கப்பட்ட உச்சபட்ச மதிப்பெண்ணாக இருந்து வருகிறது. இதனையடுத்து  ரஜினியின் ‘முள்ளும் மலரும்’ திரைப்படம் 61 மதிப்பெண்கள் பெற்றது. அதன் பின்  பல படங்கள் வெளியாகி இருந்தாலும் இந்த அளவுக்கான மதிப்பெண்களை எந்தப் படமும் எட்டவில்லை. கிட்டதட்ட  38 வருடங்களுக்குப் பிறகு இயக்குநர்  வெற்றிமாறனின்   ‘விசாரணை’ படம் அந்த இடத்தை பிடித்தது.

’16 வயதினிலே’

61  மதிப்பெண்களை அப்படத்திற்கு விகடன் வழங்கி இருந்தது.  கமலின் நடிப்பில்  வெளிவந்த  ‘நாயகன்’, ‘ஹேராம்’, மற்றும் ‘மகாநதி’ திரைப்படங்கள் 60 மதிப்பெண்களை பெற்றிருந்தது. அதன்பின் நயன்தாரா நடிப்பில் ஆழ்துளை  கிணறு தொடர்பான பிரசனைகளை எடுத்துரைத்த ‘அறம்’ ,  சென்னை நகரத்து எளிய சிறுவர்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக்கொண்டு ‘காக்காமுட்டை’ பின்  இயக்குநர் லெனின் பாரதி இயக்கத்தில் வெளியான  ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ போன்ற படங்களும்  விகடனில்  60 மதிப்பெண்களைப்  பெற்றிருக்கிறது. 

2005ஆம் ஆண்டு சேரனின் இயக்கம் மற்றும் நடிப்பில்  வெளியான ‘தவமாய்  தவமிருந்து’ திரைப்படத்திற்கும், பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்த கொடுமைகளுக்கு முடிவு நாம் ஒருவருக்கொருவர் நிகழ்த்தும் அணைப்பில்தான் இருக்கிறது என்று பேசிய ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்திற்கும்  58 மதிப்பெண்களை விகடன் வழங்கியிருக்கிறது. சூர்யா நடிப்பில் வெளிவந்த  ஜெய்பீம் படம் சமீபத்தில் வெளியானதில் 57 மதிப்பெண்களைப் பெற்றிருந்தது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சலி’ திரைப்படம் 57 மதிப்பெண்களையும்,  இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான ‘பரதேசி’ திரைப்படம் 56 மதிப்பெண்களையும் பெற்றிருக்கிறது. 

பரியேறும் பெருமாள்

அன்பு, மன்னிப்பு ஆகிய இரண்டின் மூலம், எத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமும் புன்னகையை ஏற்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திய ‘அருவி’ திரைப்படமும்,  நிலம் எங்கள் உரிமை, கல்விதான் எங்கள்ஆயுதம் என்று எடுத்துரைத்த ‘அசுரன்’ திரைப்படமும் 55 மதிப்பெண்களையும்,  மாரி செல்வராஜ் இயக்க தனுஷ் நடிப்பில் வெளியான ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை பற்றிப் பேசிய  ‘கர்ணன்’ திரைப்படம் 54  மதிப்பெண்களையும், 1989ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற பார்த்திபனின் ‘புதிய பாதை’ திரைப்படம் 53 மதிபெண்களையும் பெற்றிருக்கிறது.

மேற்குறிப்பிட்டவற்றில் உங்களின் மனம் கவர்ந்த திரைப்படம் எது? என்று கமென்டில் பதிவிடுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.