ஆசியக்கோப்பையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் ஒளிபரப்பின் போது சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை தமன்னா, கிரிக்கெட் வீரர்கள் சிலரின் பயோபிக்கில் இந்தெந்த நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் எனத் தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்.

ஆசியக்கோப்பைப் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. இந்நிலையில் இந்திய அணி இன்று வங்கதேசத்துடன் மோதி வருகிறது. ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டதால் இந்திய அணி இன்று முக்கியமான வீரர்கள் சிலருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அடுத்தக்கட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து ஆடி வருகிறது.

இந்தப் போட்டியின் இடைவெளியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நடிகை தமன்னா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். அதில் அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. வீரர்கள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களின் பயோபிக்கில் யாரெல்லாம் நடிக்கலாம் என்று கேட்கப்பட்டது.
அதற்கு தமன்னா, “ரோஹித் சர்மாவின் பயோபிக்கில் விஜய் சேதுபதியும் ஹர்திக் பாண்டியா பயோபிக்கில் தனுஷூம் ஜடேஜாவின் பயோபிக்கில் அல்லு அர்ஜுனும் நடித்தால் நன்றாக இருக்கும்” எனக் கூறியிருந்தார்.
இவர்கள் மூவருமே இதற்கு முன்பு பயோபிக் படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக்கில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில அமைப்புகளின் எதிர்ப்புக் காரணமாக விஜய் சேதுபதி அந்தத் திரைப்படத்தில் நடிக்கவில்லை. இப்போது அந்தப் படத்தில் மாதுர் மிட்டல் எனும் நடிகர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களின் பயோபிக்கில் எந்தெந்த நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதை கமென்ட் செய்யுங்கள்.