Virat Kohli: `வாட்டர் பாய்; பேட்டிங் ப்ராக்டீஸ்!' ஓய்விலும் உற்சாகம் குறையாத கோலி!

ஆசியக்கோப்பையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் இடையில் வீரர்களுக்கு விராட் கோலி தண்ணிர் பாட்டில்கள் தூக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Virat Kohli

ஆசியக்கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானையும் இலங்கையையும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. இந்நிலையில் இன்று இந்திய அணி வங்கதேசத்துடன் மோதி வருகிறது. ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டதால் இன்றைய போட்டியில் சில முக்கியமான வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, குல்தீப், சிராஜ் ஆகியோரை பென்ச்சில் வைத்துவிட்டு திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாகூர், ஷமி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்தப் போட்டி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் ஓவர் இடைவெளியின் போது களத்தில் ஆடிக்கொண்டிருந்த வீரர்களுக்கு விராட் கோலி தண்ணீர் பாட்டில்கள் தூக்கிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ப்ளேயிங் லெவனில் இல்லையென்றாலும் சக வீரர்களுக்காக உற்சாகமாக துள்ளிக் குதித்தப்படி விராட் கோலி தண்ணீர் தூக்கிச் செல்லும் காட்சி அனைவரையும் கவர்ந்திருக்கிறது. போட்டியை ஒளிபரப்பி வரும் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் விராட் கோலியின் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே 3 லட்சத்திற்கும் அதிகமான பேர் அந்த வீடியோவை பார்த்திருக்கின்றனர். மேலும், கிட்டத்தட்ட 50000 பேர் அந்த வீடியோவை லைக்கும் செய்திருக்கின்றனர்.

மேலும், பெவிலியனிலிருந்த விராட் கோலி ஓய்வெடுக்காமல் துறுதுறுவெனவே இருந்தார். திடீரென பேட்டிங் பேடை எடுத்துக் கட்டியவர் பெவிலியனிலேயே ஷாடோ ப்ராக்டீஸ் செய்ய ஆரம்பித்தார். ஆட்டம் நடந்துக் கொண்டிருந்த போதே அருகிலிருக்கும் வலைப்பயிற்சி செய்யும் இடத்திற்கு சென்று அங்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

விராட் கோலி

ஓய்வு வழங்கப்பட்டாலும் ஓய்வே எடுக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறார் கோலி என இணையத்தில் ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.