புதுடில்லி: ‘விசாரணை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் ஒத்துழைக்காவிட்டால், நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பது கடினம்’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மதுபான நிறுவனம், 2021ல் தங்கள் நிறுவன பாட்டில்களில் பதிக்கப்படும் லேபிள்களின் பதிப்புரிமை தங்களுக்கு சொந்தமானது என்பதால், அதை பிற நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதிக்க உத்தரவிட கோரி அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இதை விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் லேபிள்களை பயன்படுத்தி மதுபானங்களை விற்க பிற நிறுவனங்களுக்கு தடை விதித்தது.
இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதை அடுத்து, மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, ராஜேஷ் பிண்டால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களை கேட்ட அமர்வு, உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு செல்லும் என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
இந்த வழக்கு, மாவட்ட மற்றும் உயர் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளது. வழக்கின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள, வழக்கறிஞர் எழுப்பிய தொடர்ச்சியான ஆட்சேபனைகளை பார்க்கும்போது, நீதிமன்றங்களின் நிறைய நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் அதிகாரிகளாகச் செயல்பட்டு, நியாயமான முறையில் நடக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியாயம் என்பது சிறந்த வாதத்தின் அடையாளம் என்பதை பார் உறுப்பினர்கள் நினைவில் கொள்ள வேண்டும். குறுக்கு விசாரணையில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும், வழக்கறிஞர்கள் ஆட்சேபம் தெரிவிக்க துவங்கினால், விசாரணை சுமூகமாக நடக்காது; தாமதமாகும்.
இதனால் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பது கடினம். இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பில் நியாயம் உள்ளதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்