8வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்திய அணி: 6.1 ஓவரில் இலக்கை எட்டி சாதனை| Mohammad Siraj Abaram: Sri Lanka bowled out for 50 runs

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு: ஆசிய கோப்பை பைனலில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 15.2 ஓவரில் 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியின் முகமது சிராஜ் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்களை வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 6.1 ஓவரில் இலக்கை எட்டி, 8வது முறையாக ஆசிய கோப்பை வென்று சாதித்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) இலங்கையில் நடக்கிறது. ‛சூப்பர்-4′ சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்த, இந்தியா, இலங்கை அணிகள் பைனலுக்கு முன்னேறின. இன்று (செப்.,17) கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்த பைனலில் இரு அணிகளும் மோதின. ‛டாஸ்’ வென்ற இலங்கை அணி ‛பேட்டிங்’ தேர்வு செய்தது.

துவக்கம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். முதல் ஓவரிலேயே பும்ராவிடம் இலங்கை அணி முதல் விக்கெட்டை இழந்தது. பிறகு களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 6 விக்கெட்களுக்கு 12 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. மற்ற வீரர்களும் விரைவில் பெவிலியன் திரும்ப இலங்கை அணி 15.2 ஓவரில் 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்தியாவுக்கு எதிராக ஒரு அணி எடுத்த குறைந்தபட்ச ரன்னாக , இது பதிவானது.

அபாரமாக பந்துவீசிய இந்திய அணி பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 7 ஓவரில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை சாய்த்தார். ஹர்திக் பாண்டியா 2.2 ஓவரில் 3 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை சாய்த்தார்.

6.1 ஓவரில் வெற்றி

எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சுப்மன் கில், இஷான் கிஷன் துவக்கம் வந்தனர். இருவரும் இலங்கை பந்துவீச்சை விளாசினர். 6.1 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி இலக்கை அடைந்து 263 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்று இந்தியா சாதனை படைத்தது. இஷான் கிஷன் 23 ரன்களுடனும், சுப்மன் கில் 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 8வது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பை வென்று அசத்தியது.

ஒன்பது ஒற்றை இலக்கம்

இலங்கை அணியில் குசால் மென்டிஸ் தவிர மற்ற ஒன்பது பேரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். துஷான் ஹேமந்தா 13 ரன்னில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.