Mohammed Siraj: ஆட்டநாயகன் விருதை மைதான ஊழியர்களுக்குக் கொடுத்த சிராஜ்! – காரணம் என்ன?

ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இலங்கை மிக எளிதாக வீழ்த்தி 8 ஆவது முறையாக இந்திய அணி ஆசியக்கோப்பையை வென்றிருக்கிறது. இறுதிப்போட்டியில் இந்திய அணி சார்பாக முகமது சிராஜ் மிகச்சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

முகமது சிராஜுக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டிருந்தது. இந்த ஆட்டநாயகன் விருதை மைதான ஊழியர்களுக்கே டெடிகேட் செய்வதாகக்கூறி பரிசுத்தொகை மொத்தத்தையும் ஊழியர்களுக்கே வழங்கியிருக்கிறார் சிராஜ்.

Siraj

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்தே இந்த ஆசியக்கோப்பைத் தொடர் நடந்திருந்தது. இதில், பாகிஸ்தானில் நடைபெற்ற போட்டிகளில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், இலங்கையில் நடைபெற்ற போட்டிகளில் மழை அதிகமாகக் குறுக்கிட்டது. பல போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சூப்பர் 4 இல் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போட்டி மழை காரணமாக ரிசர்வ் டே வரை சென்றே முடிவு எட்டப்பட்டது. குறிப்பாக, சூப்பர் – 4 மற்றும் இறுதிப்போட்டி நடத்தப்பட்டிருந்த கொழும்பு மைதானம்தான் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

அப்படியிருந்தும் இந்தத் தொடரை சிறப்பாக நடத்தி முடித்ததற்கு கொழும்பு மைதானத்தின் ஊழியர்களே காரணம். அவர்கள்தான் அயராது உழைத்து மைதானத்தில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்றிக் கொண்டே இருந்தனர். இதனால்தான் சிராஜ் ஆட்டநாயகன் விருதுக்காக வழங்கப்பட்ட பரிசுத்தொகையை மைதான ஊழியர்களுக்கே வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.

Siraj

‘மைதான ஊழியர்கள் இல்லாமல் இந்தத் தொடர் நடந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அவர்களுக்கே இந்தப் பரிசுத்தொகையை வழங்குகிறேன்.’ என்றார் சிராஜ்.

பிசிசிஐ செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான ஜெய் ஷாவும் மைதான ஊழியர்களை கௌரவிக்கும் வகையில் 42 லட்ச ரூபாயை அவர்களுக்கான பரிசுத்தொகையாக அறிவித்திருக்கிறார். ‘கொழும்பு மற்றும் கண்டி மைதான ஊழியர்களின் அர்ப்பணிப்பால் இந்தத் தொடர் மறக்க முடியாத அனுபவமாக மாறியிருக்கிறது. ‘Unsung Hero’ க்களான அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.’ எனக் கூறி பரிசுத்தொகையையும் அறிவித்திருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.