Gambhir About Dhoni Batting: இந்திய அணியின் மூத்த பேட்டர்களில் ஒருவரான கௌதம் கம்பீர் எப்போதும் அவரின் வெளிப்படையான கருத்துகள் மூலம் பரபரப்பை உண்டாக்கக் கூடியவர். 2007ஆம் ஆண்டு இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்ற போதும், 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபோதும் அணியில் அசத்தலான இடதுகை பேட்டராக இருந்து, இரு கோப்பைகளையும் வெல்வதற்கு முக்கிய பங்காற்றியவராவார். குறிப்பாக, 2011ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் அவர் அடித்த 97 ரன்கள் இன்றும் இந்திய ரசிகர்களின் மனதில் அழிக்க முடியாத இன்னிங்ஸாக நிலைத்துவிட்டது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்டஸ் அணிக்கு கேப்டனாக இருந்து இருமுறை சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்தவர். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் கிரிக்கெட் வர்ணனையாளராகவும், பாஜக கட்சியில் இருக்கும் அவர் மக்களவை உறுப்பினராகவும் உள்ளார். கடந்த இரு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
பரபரப்பை உண்டாக்கக் கூடியவர், கம்பீர்
இவர் எப்போதும் ஊடக வெளிச்சத்திலேயே இருக்கும் பிரபலங்களில் ஒருவர். கிரிக்கெட் தொடர்பான பார்வையும், வெளிப்படையான கருத்துக்களும் சிலரால் விமர்சனத்திற்கு உள்ளானாலும் இவருக்கான ரசிகர் கூட்டமும் அதிகம் உள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன், கம்பீர் சற்று மோதலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அதில் பலரும் விராட் கோலிக்கு ஆதரவளித்து கம்பீர் முதிர்ச்சியானவராக நடக்க வேண்டும் என அறிவுரை கூறினாலும், கம்பீருக்கு ஆதரவளித்தும் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்திய அணியில் ‘நட்சத்திர அந்தஸ்து வீரர்’ என ஒரு வழக்கம் தொடர்வதாகவும், அது அணிக்கு நல்லதல்ல என்பதையும் அடிக்கடி கம்பீர் கூறி வருகிறார். அதாவது, எந்த விமர்சனமும் இல்லாமல் மொத்த அணியில் ஒருவருக்கு மட்டும் கூடுதல் கவனம் அளிப்பதாக அவர் குற்றம்சாட்டி வந்தார். இதனை பல ரசிகர்கள் தோனி, கோலி ஆகியோருடன் ஒப்பிட்டு கம்பீருக்கு கண்டனத்தையும் தெரிவிப்பார்கள். எனவே, தோனி, கோலி ரசிகர்கள் கம்பீரை தாக்கி பேசுவதை நீங்களே பலமுறை சமூக வலைதளங்களில் பார்த்திருக்க வாய்ப்புள்ளது.
தோனி முதலில் பேட்டர், அப்புறம் தான்…
ஆனால், இதெல்லாம் சமூக வலைதள பேச்சுக்களாக மட்டும் உள்ளன. அந்த வகையில், தோனியை பாராட்டும் வகையில் கௌதம் கம்பீர் சமீபத்தில் தெரிவித்த கருத்து ஒன்று வைரலாகி வருகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் அவர் பேசியதாவது, “பேட்டிங்கால் ஆட்டத்தை மாற்றக்கூடிய இந்தியாவின் முதல் விக்கெட் கீப்பர், தோனி தான். முன்னதாக, கீப்பர் பேட்டர் என்றால் முதலில் கீப்பராகவும், ஒரளவு பேட்டிங் செய்யக்கூடியவர்களாகவே இருந்தனர். ஆனால் தோனி முதலில் பேட்டிங்கில் அசத்தினார், அதன் பின்னர் தான் விக்கெட் கீப்பராக அவதாரமெடுத்தார். இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த வரமாக, 7வது இடத்தில் இருந்து உங்கள் போட்டிகளை வெல்லக்கூடிய ஒரு விக்கெட் கீப்பர்-பேட்டரை தோனி மூலம் பெற்றோம், ஏனென்றால் அவருக்கு அந்த ஆற்றல் இருந்தது.
தோனியின் தியாகம்
தோனி 3ஆவது இடத்தில் பேட் செய்திருந்தால், பல ஒருநாள் போட்டிகளில் சாதனைகளை அவர் முறியடித்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். மக்கள் எப்போதும் தோனியைப் பற்றியும், கேப்டனாக அவர் செய்த சாதனைகளைப் பற்றியும் பேசுகிறார்கள், இது முற்றிலும் உண்மை. ஆனால் கேப்டன்சியின் காரணமாக நான் உணர்கிறேன், அவர் அவரிடம் உள்ள பேட்டரை தியாகம் செய்தார். மேலும் அவரது பேட்டிங் மூலம் அவர் இன்னும் நிறைய சாதித்திருக்கலாம். நீங்கள் ஒரு கேப்டனாக இருக்கும்போது இது நடக்கும், ஏனென்றால் நீங்கள் அணியை முன்னிலைப்படுத்துகிறீர்கள், உங்களைப் பற்றி மறந்துவிடுவீர்கள்.
அவர் 6 அல்லது 7ஆவது இடத்தில் பேட்டிங் செய்யத் தொடங்கினார். அவர் கேப்டனாக இல்லாதிருந்தால், அவர் இந்தியாவின் நம்பர் 3 பேட்டர் ஆக இருந்திருப்பார், மேலும் அவர் அடித்ததை விட அதிகமாக ஸ்கோர் செய்திருக்கலாம். மேலும் அதிக சதங்களையும் அடித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். மக்கள் எப்போதும் கோப்பைகளுடன் தோனியைப் பார்க்கிறார்கள், ஆனால் என் கருத்துப்படி, அவர் அணியின் கோப்பைகளுக்காக தனது சர்வதேச ரன்களை தியாகம் செய்தார்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | முகமது சிராஜ் சொத்து மதிப்பு: கூரையில் இருந்து கோடீஸ்வரரான வளர்ச்சி