தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பாராட்டப்படும் இலங்கையில், தாய் மற்றும் சேய் சுகாதார சேவைகளை மிகவும் வினைத்திறனுடன் வழங்குவதற்காக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழிநுட்பத்தை, அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் தீர்மானித்துள்ளது.
இலங்கையின் சுகாதார சேவையில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுவதுடன், இது தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச வளவாளர்களைக் கொண்ட முதற்கட்ட செய்தியாளர் மாநாடு அண்மையில் (15) கொழும்பு 03 movenpick ஹோட்டலில் நடைபெற்றது.
கனேடிய அரசாங்கத்தின் ஆதரவுடன் சர்வதேச ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (IDRC), PHC Global மற்றும் GTC அறக்கட்டளை ஆகியவை, தெற்காசிய நாடுகளில் தாய், சேய் மற்றும் இளம்பருவ ஆரோக்கியத்தில் செயற்கை நுண்ணறிவை இணைக்கும் திட்டமாக இதை அறிமுகப்படுத்தியுள்ளன.
இச்செயற்திட்டத்திற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம், குடும்ப சுகாதார பணியகம் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் கணனி தொழில்நுட்ப பீடம் என்பன இணைந்து சமர்ப்பித்த ஆய்வு முன்மொழிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையைத் தவிர, தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளில் தாய் , சேய் இறப்பு வீதம் மிக அதிகமாகப் பதிவாகின்றன, அதேவேளை உலகின் பல நாடுகள் தாய், சேய் ஆரோக்கியத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன.
தாய், சேய் பராமரிப்பு சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படும் இந்த திட்டம், செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்கும் முதல் திட்டமாகும்.