117 நாள்கள் வக்ர நிலையில் குருபகவான் பரிகாரம் தேவைப்படும் ஆறு ராசிகள்!

குரு பகவான் செப்டம்பர் 4 முதல் வக்ரநிலையில் சஞ்சரித்து வருகிறார். டிசம்பர் 30 வரையிலும் குருபகவானின் வக்ர நிலை நீடிக்கும். ஜோதிடத்தில் `வக்ரம்’ என்றால் இயல்புக்கு மாறிய கிரக நிலை என்று சொல்லலாம். கிரகங்கள், தாங்கள் சஞ்சரிக்கும் திசை மற்றும் தன்மை ஆகியவற்றில் மாறிச் செயல் படும்போது அதை வக்ரம் என்கிறோம்.

குரு பார்க்கக் கோடி நன்மை என்பது ஜோதிட மொழி. பூரண சுபரான குருபகவான் ஒரு மனிதனின் வாழ்வை வளமாக்குபவர். அவர், வக்ர கதியில் சஞ்சாரம் செய்யும்போது குறிப்பிட்ட பலன்களைத் தருவார். அது சிலருக்குச் சாதகமாகவும் சில ராசியினருக்குப் பாதகமாகவும் அமையலாம்.

குரு பகவானின் வக்ர சஞ்சார நிலை

குருபகவான் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி முதல் வக்ரகதியில் சஞ்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார். 28.11.23 வரையிலும் பரணியில் வக்ரமாக சஞ்சரிப்பார். பிறகு அசுவினி நட்சத்திரத்துக்கு நகர்ந்து, 30.12.23 அன்று காலை 7:35 வரையிலும் வகர கதியில் செல்வார். பிறகு, பரணி நட்சத்திரத்தில் வழக்கம்போல் நேரான தன் பயணத்தைத் தொடர்வார். அதாவது, மொத்தம் 117 நாள்கள் குரு வக்ர சஞ்சாரத்தில் இருப்பார்.

இந்தக் காலகட்டத்தில் அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரக் காரர்களுக்கு யோக பலன்கள் அமையும். ராசிகளை எடுத்துக் கொண்டால் மேஷம், மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ஏற்றமான காலம்தான். அவர்களுக்கெல்லாம் திடீர் பணவரவு, தனலாபம் என பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டு. திடீர் அதிர்ஷ்ட யோகங்களும் கைகூடும். பிரச்னைகள் வந்தாலும் சிறியளவில் வந்து மறையும் எனலாம். மற்ற ராசிகளான ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளுக்கு என்ன பலன்கள் உண்டாகும், பரிகாரம் என்ன… தெரிந்துகொள்வோமா?

ரிஷபம்: இந்த ராசியைச் சேர்ந்த ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு இந்த குரு வக்ரப் பெயர்ச்சி நல்ல பலன்களைக் கொடுக்கும். கார்த்திகை, மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகளும் அதிகரிக்கும். ராகு – கேது பெயர்ச்சிக்குப் பின் சிக்கல்கள் குறையும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்திலும் அதிரடி முடிவுகள் வேண்டாம். வியாபாரம் வழக்கம்போல் இருக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி பகவானை வழிபடுவதும், அன்னதானம் செய்வதும் விசேஷம். இதனால் கெடுபலன்கள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.

கடகம்: இந்த ராசியில் ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் எச்சரிக்கை யுடன் இருக்கவேண்டும். பணியிடத்தில் தேவையற்ற பிரச்னைகள் உருவாகும் என்றாலும் பாதிப்பு இருக்காது. வியாபாரிகள் புதிய கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்கு வாதம் வேண்டாம். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். புதிய நண்பர்களின் சேர்க்கையில் கவனம் தேவை. பொருளாதாரத்தைப் பொறுத்தவரை கவலையில்லை.

பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்கைக்கு இலுப்பை எண்ணெயில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் தடைகள் நீங்கும் சுபங்கள் கைகூடிவரும்.

சிம்மம்: இந்த ராசியினர் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வார்த்தைகளால் வம்பு வந்து சேரும். பொருளாதார அளவில் மிகுந்த எச்சரிக்கை தேவை. யாருக்கும் கடன் அல்லது ஜாமின் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தைப் பொறுத்த அளவில் எதிர்பாராத இடமாற்றம் அல்லது விரும்பத்தகாத பணி கிடைக்க வாய்ப்புண்டு. அலுவலகத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்திலும் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. என்றாலும் எதிர்காலத்துக்கு வலுசேர்க்கும் பல விஷயங்கள் இந்தக் காலகட்டத்தில் நிகழும்.

பரிகாரம் : செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் துர்கைக்கு எலுமிச்சை மாலை சாத்துவதும், விளக்கேற்றி வழிபடுவதும் நல்லது.

துலாம்: இவர்களுக்கு மனதில் தடுமாற்றங்கள் ஏற்படும் கால கட்டம். துலா ராசி இளைஞர்கள் அவசரப்பட்டு முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. புதிய முதலீடுகளில் கவனம் தேவை. யாரையும் நம்பிக் கடன் கொடுப்பதோ அல்லது பொறுப்புகளை ஒப்படைப்பதையோ தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் மூன்றாம் நபரின் தலையீட்டை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. சின்னச் சின்ன விஷயத்துக்கும் கோபப்படுவதோ சண்டையிடுவதோ மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்; கவனம் தேவை.

பரிகாரம் : வெள்ளிக்கிழமைகளில் காமாட்சி அம்மனுக்கு வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ நெய்விளக்கேற்றி வணங்கிவர பிரச்னைகள் படிப்படியாகக் குறையும்.

தனுசு: அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிகாரப் பதவிகளில் இருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு இது கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலகட்டமாக அமையும். ‘பழி ஓரிடம் பாவம் ஓரிடம்’ என்பார்களே அதுபோன்று நீங்கள் செய்யாத தவறுக்காகத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும். தேவையற்ற தலைகுனிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. குறிப்பாக எதிர்பாலினத்தவரால் தேவையற்ற சிக்கல்கள் உருவாக வாய்ப்புண்டு. கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

பரிகாரம் : மூல நட்சத்திர நாளில் ஆஞ்சநேயர் சந்நிதிக்குச் சென்று வழிபடுவதும் ராமாநுஜர் சந்நிதி இருக்கும் ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்வதும் சிறப்பு.

கும்பம்: இவர்கள் இந்தக் குரு வக்ர காலத்தில் நிதானத்துடன் செயல்படவேண்டியது அவசியம். குறிப்பாக குடும்பம் தொடர்பான முக்கிய முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டியது அவசியம். புதுச் சொத்து வாங்குவது, பழைய சொத்துக்களை விற்பது போன்ற விஷயங்களில் நன்கு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். பணியிடத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரிகள் எச்சரிக்கை யோடு செயல்பட வேண்டியது அவசியம்.

பரிகாரம் : சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சமர்ப்பணம் செய்தும் வடைமாலை சாத்தியும் வழிபடுவதன் மூலம் தொல்லைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.