"இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும்" – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் இரண்டாவது தேசிய மாநாடு காணொலி வாயிலாக நடந்தது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, “சமூகநீதி பேசும் இடத்தில் நிச்சயமாக நான் இருப்பேன் என்ற அடிப்படையில் நான் பங்கெடுத்து உரையாற்றுகிறேன். சமூக நீதி, மதசார்பற்ற அரசியல், சமதர்மம், சமத்துவம், மாநில சுயாட்சி, கூட்டாட்சிக் கருத்தியல் இவை உயிர்வாழும் இந்தியாவே, இணையற்ற இந்தியா என்பதால், இத்தகைய கருத்தியல்களை முன்னெடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் அகில இந்திய அளவில் சில கூட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. அதில் மிகமிக முக்கியமானது இந்த சமூகநீதி கூட்டமைப்பு!

திமுகவை பொறுத்தவரையில், சமூகநீதியைத்தான் இயக்கத்தின் இலக்கணமாக வைத்துள்ளது. இந்த இயக்கம் உருவாகக் காரணமே சமூகநீதிதான். சமூகநீதி – சமதர்ம சமுதாயத்தை அமைப்பதற்காகவே திராவிட இயக்கம் தோன்றியது. 1916-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் நீதிக்கட்சியானது சமூகநீதியை உருவாக்கவே தொடங்கப்பட்டது.

சென்னை மாகாணத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய நீதிக்கட்சியின் ஆட்சியில், 1922-ஆம் ஆண்டு, அன்றைய முதலமைச்சர் பனகல் அரசர் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமை ஆணையைப் பிறப்பித்தார். அதுதான் இன்றுவரை தமிழ்நாட்டில் தொடர்கிறது. தமிழ்நாட்டைப் பார்த்து பல்வேறு மாநிலங்கள் சமூகநீதியை வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டு மக்களுக்கு சமூகநீதி வழங்கியது மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற மாநில ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அத்தகைய உரிமை கிடைக்க வழிகாட்டியதும் திராவிட இயக்கம்தான்!

தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களின் காரணமாகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டமே முதன்முறையாக திருத்தப்பட்டது. “சமுதாயத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் எந்தச் சமூகத்தவர்க்கும் செய்யும் சலுகைகளை, அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவும் தடுக்காது” என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 15(4) என்ற முதலாவது திருத்தம்!. இந்த திருத்தத்துக்குக் காரணம், “happenings in Madras” என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார் அன்றைய பிரதமர் நேரு.

‘Socially and Educationally’ என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் சமூகநீதி வரையறை. பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்க அதிகாரமளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340-ஆவது பிரிவில் ‘Socially and Educationally’ என்பதுதான் வரையறையாக உள்ளது. அதேசொல்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தத்திலும் சொல்லப்பட்டது. அதாவது சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்களுக்குத் தரப்பட வேண்டும் என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரையறை!

இப்படி தொடர்ச்சியாக, சமூகநீதியை நிலைநாட்ட போராடி வந்தாலும், சமூகநீதிக்கான தடைகளும் விழவே செய்கின்றன. இதில் பா.ஜ.க. பெரிய அளவிலான தடுப்புச் செயல்களை செய்து வருகிறது. சமூகநீதியை முறையாக பா.ஜ.க. அமல்படுத்துவது இல்லை. கடந்த 9 ஆண்டுகாலத்தில் ஒன்றிய அரசின் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை. ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்கள் முன்னேறுவதை பா.ஜ.க. விரும்பவில்லை. எனவேதான் அவர்கள் சமூகநீதிக்கு எதிராக இருக்கிறார்கள்.

திடீரென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இந்த நேரத்தில் நாம் கேட்க வேண்டியது, பிற்படுத்தப்பட்டோருக்கு சமூகநீதி வழங்கிய வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த போது, இதே ஆர்.எஸ்.எஸ் எங்கே போயிருந்தது? அன்றைக்கு ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க.வை பின்னால் இருந்து இயக்கியது இதே ஆர்.எஸ்.எஸ்.தானே? எனவே, நாடாளுமன்றத் தேர்தல் வரப்போவதால் விளிம்பு நிலை மக்களை ஏமாற்றுவதற்கு இப்போது மோகன் பகவத் இப்படி சொல்கிறாரே தவிர, உள்ளார்ந்த ஈடுபாடு காரணமாக அவர் சொல்லவில்லை.

பா.ஜ.க.வுக்கு உண்மையிலேயே சமூகநீதியில் அக்கறை இருக்குமானால், 9 ஆண்டுகால ஆட்சியில், ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்தியிருக்க வேண்டும். ஏன், ஒன்றிய அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் சமூகநீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும். அதனைச் செய்வார்களா?

சமூகநீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சினை அல்ல. அனைத்து மாநிலங்களின் பிரச்சினையாகும். குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் போது இது அகில இந்தியாவிற்கும் பொதுவான பிரச்சினை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சாதி, வகுப்பு அளவீடுகள் வேறுபடலாம். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு செயல்பாட்டில் இருக்கிறது.

அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் இடஒதுக்கீடு வெவ்வேறு விழுக்காடாக இருந்தாலும், பிரச்சினை ஒன்றுதான். அதுதான் புறக்கணிப்பு. எங்கெல்லாம் புறக்கணிப்பு, ஒதுக்குதல், தீண்டாமை, அடிமைத்தனம், அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் அதனை முறிக்கும் மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி.

பட்டியலின, பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும். இவற்றை அகில இந்திய ரீதியில் கண்காணிக்க வேண்டும். சமூகரீதியாகவும் கண்காணிக்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்தை அமைத்தது. சமூகநீதி ஆணையத்தை அமைத்தது. சமூகநீதி கண்காணிப்புக் குழுவை அமைத்தது. இந்தக் கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும். வழிகாட்டும். செயல்படுத்தும். இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும். இதுபோல அனைத்து மாநிலங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அகில இந்திய அளவில் இந்தக் குழு நிச்சயம் அமைக்கப்பட வேண்டும்.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கான நியமனங்களில் அட்டவணை சாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், ஓபிசிக்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை கட்டாயமாக்குவதற்கு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை ஒன்றிய அரசு கொண்டுவர வேண்டும். பதவி உயர்வு மற்றும் பணிமூப்பு நிர்ணயம் ஆகியவற்றில் OBC-களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். 2015-இல் சேகரிக்கப்பட்ட சமூகப் பொருளாதார சாதி கணக்கெடுப்புத் தரவை ஒன்றிய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

குறிப்பாக, மிக முக்கியமாக, இடஒதுக்கீடு வழங்குதல் என்பது மாநில அரசுகளின் கையில்தான் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும். தமிழ்நாடு மாநிலத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. சில மாநிலங்களில் 50 விழுக்காடு உள்ளது. அந்தந்த மாநிலங்களின் மக்கள் விகிதாச்சாரம் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். எனவே, 50 விழுக்காட்டிற்கு மேல் இடஒதுக்கீடு அளவீடு போகக் கூடாது என்று சொல்வதும் சரியல்ல. “இடஒதுக்கீடு” மாநிலங்களின் உரிமை என்று அதிகாரத்தை மாற்றி வழங்கினால்தான், அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கு உரிய இடஒதுக்கீட்டினை வழங்க முடியும்” இவ்வாறு பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.