இந்த போர் முடியவே முடியாது : சீமானை எச்சரிக்கும் விஜயலட்சுமி

நடிகை விஜயலட்சுமி, தன்னை சீமான் மதுரை கோயிலில் வைத்து திருமணம் செய்ததாகவும், பலமுறை கருத்தரித்து, அதை சீமான் கலைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டி புகாா் அளித்தாா். அதன் பேரில், சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் இரண்டு முறை சம்மன் அனுப்பினா். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. இதற்கிடையே, கடந்த செப்.,15ம் தேதி சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்தார்.

சீமான் ஆஜர்
இந்நிலையில், போலீசாரின் சம்மனை ஏற்று வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்காக சீமான் இன்று(செப்., 18) ஆஜரானார். அவரது மனைவி கயல்விழி, வழக்கறிஞர்கள் உள்பட 5 பேர் மட்டுமே போலீஸ் ஸ்டேஷன் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சீமானுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் கூடியுள்ள நிலையில், போலீஸ் ஸ்டேஷனுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

வன்கொடுமை
போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரான பின்னர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2 பெண்களால் நான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது. வழக்கறிஞர் என்ற முறையில் என் மனைவி என்னுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நான் போலீசாருக்கு விளக்கம் அளித்துள்ளேன்.

13 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கால் எனக்கு தான் வன்கொடுமை நடந்துள்ளது. பெண் வன்கொடுமையை பேசுகிறவர்கள், ஆண்களுக்கு நிகழும் வன்கொடுமையையும் பேசுங்கள். இந்த பிரச்னையில் என் மனைவி கயல்விழி எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்த வீரலட்சுமி மன்னிப்பு கேட்க வேண்டும். விஜயலட்சுமிக்கு 8 முறை கருக்கலைப்பு செய்தேன் என்பது மிகப்பெரும் நகைச்சுவை என்றார்.

போர் தொடரும்
பெங்களூரு சென்ற விஜயலட்சுமி சீமானின் பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‛‛சாட்டை துரை முருகன் தான் பாலசுப்ரமணியம் என்ற வக்கீல் ஒருவரை ஏற்பாடு செய்து என்னை வெளியில் மீட்க வைத்தார். என் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் பணம் போட்டு என்னை பெங்களூருக்கு அனுப்பி வைத்தார். மேலும் புகாரையும் உடனே வாபஸ் பெற செய்தார். சீமான் இன்று ஒன்றுமே நடக்காதது போல் பேசி வருகிறார். சாட்டை துரைமுருகனின் கால் லிஸ்ட்டை எடுத்தால் உண்மை தெரிய வரும்.

நீங்கள் மான நஷ்ட வழக்கு போடுங்கள். நான் எல்லா ஆதாரங்களையும் கொண்டு வந்து காண்பிக்கிறேன். என்னை ஓட வைப்பேன் என்கிறார். அப்படி என்றால் அச்சுறுத்துகிறாரா. போலீஸ் இதுபற்றி ஒன்றுமே கேட்கவில்லை. மதுரைக்கு நான் ஏன் ஐந்து முறை அழைத்து செல்லப்பட்டேன். இதுபற்றி போலீசார் விசாரிக்கவில்லை. சாட்டை துரை முருகன் தான் எங்களை பெங்களூருவிற்கு அனுப்பி வைத்தார். இதற்கு சீமான் என்ன சொல்ல போகிறார். என்னை ஏதோ பொய் சொல்லும் பெண் போன்று சீமான் சித்தரிக்க பார்த்தால் நிச்சயம் இந்த போர் முடியவே முடியாது என்பதை உறுதிப்பட கூறுகிறேன்.

இவ்வாறு விஜயலட்சுமி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.