பாட்னா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்க பகுதியில் திடீரென பூமியில் விரிசல் ஏற்பட்டதில், மூன்று பெண்கள் பூமிக்குள் புதைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் உள்ள கோந்துடி என்ற இடத்தில், ‘கோல் இந்தியா லிமிடெட்’ பொதுத்துறை நிறுவனத்துக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கங்கள் இயங்கி வருகின்றன.
இங்கு நேற்று திடீரென பூமியில் விரிசல் ஏற்பட்டு பெருமளவிலான நிலப்பகுதி பூமிக்குள் புதைந்தது. அப்போது, காலைக்கடன் கழிக்க சென்ற பர்லா தேவி, தாந்தி தேவி, மண்டவா தேவி என்ற மூன்று பெண்கள் பூமிக்குள் புதையுண்டனர்.
விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டும், போலீசார் மற்றும் சுரங்க மீட்பு படையினர் மிக தாமதமாக சம்பவ இடத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. பூமிக்குள் புதையுண்ட மூன்று பெண்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என, மீட்புப்படையினர் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள், நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் அலட்சியத்தால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாக புகார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பெரும் அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மூன்று பெண்களின் உடல்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement