மகளிர் இட ஒதுக்கீடு மசோதா காங்கிரஸ் கட்சியினுடையது: சோனியா காந்தி கருத்து

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் சோனியா காந்தி இன்று (செப்.19) தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கையை வரவேற்பதாக காங்கிரஸ் திங்கள் கிழமை தெரிவித்தது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்குள் நுழையும் முன்பாக மகளிர் இட ஒதுக்கீடு குறித்து அவரிடம் கேட்ட போது அவர், அது எங்களுடையது (அப்னா ஹைய்) என்று தெரிவித்தார்.

முன்னதாக திங்கள் கிழமை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் இந்தியில் வெளியிட்டுள்ள பதிவொன்றில்,”மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக கோரி வருகிறது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வெளியாகும் கருத்தினை நாங்கள் வரவேற்கிறோம். மசோதாவின் விவரங்களுக்காக காத்திருக்கிறோம். இதுகுறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு முன்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதித்து இந்த திரைமறைவு அரசியலுக்கு பதிலாக ஒருமித்த கருத்தை எட்டியிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை செவ்வாய்க்கிழமை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினால் அது காங்கிரசுக்கும் அதன் கூட்டணிக்கட்சிகளான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கிடைந்த வெற்றி என்று மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மாநிலங்களவை உறுப்பினரான கபில் சிபல் செவ்வாய்க்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவொன்றில், “ஒரு வேளை மோடியால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டால், அநேகமாக அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்கும் நிலையில் கடந்த பத்து ஆண்டுகளாக காத்திருந்தது ஏன் என்று ஆச்சரியப்படுகிறீர்களா?

ஒருவேளை 2024 மக்களவைத் தேர்தல் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், ஓபிசி பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்காமல் போனால் 2024-ல் பாஜக உத்தரப் பிரதேசத்திலும் தோல்வியடையும். இதுகுறித்து யோசித்து பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது மக்களவையில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பகு குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.