விழுப்புரம் நகரில், உள்ள சென்னை – விழுப்புரம் நெடுஞ்சாலை பகுதி குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். எனவே, இந்த சாலை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதனிடையே, அந்த சாலையின் நிலை மற்றும் பொதுமக்களின் கோரிக்கை குறித்து நேற்றைய தினம் (18.09.2023) ஜூனியர் விகடனின் முகநூல் பக்கத்தில் நேரலை காட்சிகளை பதிவு செய்தோம்.







அது விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குச் சென்ற நிலையில், தற்போது அந்த பழுதுகளை சீரமைக்கும் பணி துவங்கியிருக்கிறது. இப்பகுதியில் நெடுஞ்சாலையை அமைத்த ஒப்பந்ததாரரிடமே, சாலையில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யும்படி அறிவுறுத்தியிருக்கிறது நெடுஞ்சாலைத்துறை. அதன்படி, சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசின் இந்த துரித செயல்பாடு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.