புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒருமனதாக ஆதரவு கிடைத்தது.
ஒருவரும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், 215 எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது. 215 எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களித்தனர். இந்த மசோதா சட்டமாக மாற இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் மட்டும் தேவை. 454 எம்.பி.க்கள் ஆதரவுடன் நேற்று மக்களவையில் மசோதா நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.
மசோதா விவாதத்தின்போது, மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசுகையில், “விவாதங்கள் மிகவும் வெற்றிகரமாக இருந்தன. எதிர்காலத்திலும், இந்த விவாதம் நம் அனைவருக்கும் உதவும். மசோதாவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இந்த உத்வேகம் இந்தியர்களிடையே புதிய சுயமரியாதையை பிறப்பிக்கும்” என்றார்.
மக்களவையைப் போலவே, ராஜ்யசபாவிலும் இந்த மசோதாவை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடு குறித்து விவாதங்கள் எழுந்தன. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகே மசோதா நடப்பாக்கப்படும். இதற்கு குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் ஆகும் என்பதால் இதுகுறித்து விவாதங்கள் நடந்தன. மசோதாவை உடனடியாக செயல்படுத்த இண்டியா கூட்டணியினர் ஆதரவு தெரிவித்தனர்.
விவாதத்தின்போது “இந்த மசோதாவில் திருத்தம் செய்வது கடினம் அல்ல… உங்களால் இதை இப்போது செய்யலாம். ஆனால் 2031 வரை தள்ளிப் போட்டுவிட்டீர்கள். இதற்கு என்ன அர்த்தம்?” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.
அதேபோல், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பாஜக அக்கறை காட்டவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸின் டெரெக் ஓ பிரையன் குற்றம் சாட்டினார். அவர் பேசுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 16 மாநிலங்களில் முதல்வராக ஒரு பெண்ணை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று விமர்சித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் விவாதத்தில் பங்கேற்று பேசுகையில், “யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் 2029க்குள் மசோதாவுக்கான நடைமுறையை முடிக்காவிட்டால், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம்” என்று பாஜக அறிக்கை விட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறுக்கிட்டு, “வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா மூலம் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு நல்ல தொடக்கம் அளிக்கவே சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது. பெண்கள் விவகாரங்களில் பாஜக அரசியல் செய்வதில்லை” என்றார்.