எடப்பாடி போட்ட ஸ்கெட்ச்… சொதப்பிய செல்லூர் ராஜூ – காட்டமான தலைமை!

அ.தி.மு.க குறித்தும் அதன் தலைவர்கள் குறித்தும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளை கூறிவருகிறார். இந்நிலையில் , அண்ணா குறித்து அவதூறு கருத்தை பேசிய அண்ணாமலையை, இனியும் விடக்கூடாதென எண்ணி, அவரது வாயை டெல்லி அடிக்கவேண்டுமென்று, ‘பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை’ என்று அ.தி.மு.க அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் செப் 18-ம் தேதி அறிவித்தார். ‘இதுதான் கட்சியின் கருத்தும் என்றும் தலைமையின் உத்தரவென்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.

அண்ணாவால் முறிந்த கூட்டணி

ஆனால், பா.ஜ.க தலைவர்களோ, ‘ கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை’ என்று சால்சாப்பு பேசிவந்தனர். குறிப்பாக, ‘ கூட்டணி இல்லையென்று நாம் தெளிவுப்படுத்திவிட்டோம். இனி யார் (டெல்லி) நம்மிடம் பேசவேண்டுமோ அவர்கள் பேசினால்போதும். நம்மவர்கள் யாரும் இதை பொதுவெளியில் பேசவேண்டாம். ஐ.டி விங்க் மட்டும் சமூகவலைத்தளங்களில் பேசட்டும்.’ என்று தலைமை கறார் உத்தரவு போட்டு இருந்ததாகவும் தகவல்கள் பரபரத்தது.

இந்நிலையில்தான் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “பாஜகவுடன் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லையே… அண்ணாமலையின் பேச்சுக்குதான் எதிர்வினை ஆற்றினோம். மோடி ஜீ-தான் மீண்டும் பிரதமராகவேண்டும் என்றுதான் எங்களின் எண்ணம். அதேபோல தமிழ்நாட்டில் எடப்பாடிதான் முதல்வராக வரவேண்டுமென்று அண்ணாமலை அறிவிக்கவேண்டும்.” என்று பேசினார்.

அண்ணாமலை

இதற்கு பதிலளிக்கும்விதமாக ‘ எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. கூட்டணி என்றால் சில முரண்கள் இருக்கதான் செய்யும். எங்களில் ஒரே மையப்புள்ளி மோடியை மீண்டும் பிரதமராக்குவதுதான். மற்றப்படி, எடப்பாடியை நாங்கள் ஏன் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும். அதற்கான நான் இங்கு வரவில்லை’ என்று அண்ணாமலை பேசியிருந்தார்.

இது எடப்பாடி தரப்பை எரிச்சலுக்கு ஆளாக்கியதோடு, செல்லூர் ராஜூ மீது கோப கனலை தூண்டிவிட்டது என்கிறார்கள் அ.தி.மு.க சீனியர்கள்.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பேசினோம். “மத்திய அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி சந்தித்து வந்தப்பின்னர், அந்த சந்திப்பு குறித்து சில தவறான கருத்தை பாஜக பரப்பியது. குறிப்பாக 20 சீட் அமித் ஷா கேட்டதாகவும், அதற்கு எடப்பாடியால் பதலளிக்க முடியாமல் ஓகே சொன்னதாகவும் தகவல் பரப்பட்டது. மேலும் எங்களின் கட்சியை தாழ்த்தியும் பேசி இருக்கிறார்கள். இது எடப்பாடியை அப்செட் ஆக்கியது.

செல்லூர் ராஜூ

அதேபோல, அண்ணா குறித்து அண்ணாமலையின் அவதூறு கருத்துக்கு பதிலளிக்க முடிவு செய்தது தலைமை. ஆனால், எடப்பாடி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களை அண்ணாமலை விமர்சித்தவிதம் கூட்டணி தர்மத்துக்கு முரணாக இருந்ததால்தான், கூட்டணி இல்லையென்று அறிவித்தனர். இது அண்ணாமலைக்கு தலைமை வைத்த செக் என்பதால்தான், கூட்டணி குறித்து அவரால் எதுவுமே பேசமுடியவில்லை. அ.தி.மு.க-வுடன் சமாதானம் பேச்சுவார்த்தையில் டெல்லி ஈடுப்பட்டு வந்தது. மேலும், தமிழக பா.ஜ.க தலைவர்கள் கூட்டணி குறித்து எதுவும் பேசமுடியாமல் திணறி வந்தனர். அண்ணாமலைக்கு எதிராக எடப்பாடியின் ஸ்கெட்ச் பக்காவாக வேலைப்பார்த்துக் கொண்டிருந்தது.

எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், கூட்டணியில் பிரச்னையெல்லாம் இல்லையே என்று சொன்னதோடு, தலைமை மீண்டும் விமர்சிக்கும்விதமாக அண்ணாமலைக்கு செல்லூர் ராஜூ பாயின்ட் எடுத்து கொடுத்துவிட்டார். இது எடப்பாடியை கோபத்தின் உச்சிக்கே கொண்டுபோய்விட்டது. இதையடுத்து, செல்லூர் ராஜூவை அழைத்த தலைமை, ‘ உங்களை யார் பேசச்சொன்னது. என்ன நடக்குதென்று எதுவுமே தெரியாமல் நீங்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். இதுதான் லாஸ்ட் , இனிமேல் இப்படி நடந்தால்…” என வறுத்தெடுத்துவிட்டது.” என்றார் விரிவாக…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.