கோவையில் மீண்டும் போட்டியிடுவேன்: மநீம தலைவர் கமல்ஹாசன் திட்டவட்டம்

கோவை: ‘‘எனக்கு மூக்கு உடைத்தாலும் பரவாயில்லை, மருந்து போட்டு வந்து மீண்டும் கோவையில் நிற்பேன்’’ என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை வகித்தார். அப்போது கட்சி நிர்வாகிகளிடையே அவர் பேசியதாவது: “சனாதனம் என்ற ஒரு வார்த்தை சொன்னதற்காக சிறுபிள்ளையை தாக்குகின்றனர். அது அவரது தாத்தாவுக்கு தாத்தா கூறிய தகவல் என்றார். எங்களுக்கு அந்த வார்த்தையை சொன்னவர் பெரியார். சாமி இல்லை என சொல்வது பெரியாரின் வேலை அல்ல, சமுதாயத்துக்காக கடைசி வரை வாழ்ந்தவர் பெரியார்.திமுக அல்லது வேறு எந்த கட்சியும் பெரியாரை சொந்தம் கொண்டாட முடியாது, பெரியாரை தமிழகமே சொந்தம் கொண்டாடும்.

நாடாளுமன்ற தேர்தலை ஒன்றிய அரசு விரைவில் நடத்துவார்கள். கடந்த முறை எம்எல்ஏ தேர்தலில் தோல்வியடைந்தபோதும் நெஞ்சை நிமிர்த்தி நடந்தேன். என் முகத்தில் அப்போது சோகம் இல்லை. மீண்டும் நாம் சூழ்ச்சிக்கு ஆளாகக்கூடாது என்று நினைத்தேன். எனக்கு வெவ்வேறு இடங்களில் இருந்து அழைப்பு வருகிறது. இந்த வயதில் அரசியலுக்கு வந்ததற்கு நான் மன்னிப்புதான் கேட்க வேண்டும். கருணாநிதி என்னை திமுகவுக்கு வருமாறு அழைத்தார். அப்போது நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப்போகிறேன் என சொல்லியிருக்க வேண்டும். அப்பா காங்கிரஸில் இருப்பதால் காங்கிரசில் சேர்கிறேன் என சொல்லியிருக்க வேண்டும். அப்போதே அரசியலில் இறங்கி இருக்க வேண்டும்.

கோவையில் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன, மொத்தமாக அனைத்து பூத்களிலும் பணியாற்ற 40 ஆயிரம் பேர் வேண்டும். கோவைக்கு வாங்க என கூப்பிடுவது மட்டும் போதாது, களப்பணியாற்ற 40 ஆயிரம் பேரை தயார் செய்ய வேண்டும். எனக்கு மூக்கு உடைத்தாலும் பரவாயில்லை, மருந்து போட்டு வந்து மீண்டும் கோவையில் நிற்பேன்.

நல்ல தலைமை தமிழகம் முழுவதற்கும் வர வேண்டும், அஜாக்கிரதையால் நாம் பலியாகி விடக் கூடாது. அனைவரும் சேர்ந்து தான் தேரை இழுக்க வேண்டும். கட்சிக்கு புதிதாக வருபவர்களுக்கு வேலியாக இருக்காமல் ஏணியாக இருக்க வேண்டும். கட்சியில் பதவி நிரந்தரம் இல்லை. உறவு தான் நிரந்தரம். பணியாற்றினால் பதவி நிரந்தரம்.

ஒருவரே பிரதமராக இருக்க வேண்டும் என நினைப்பது சர்வதிகாரம். இந்தி ஒழிக என சொல்லவில்லை. தமிழ் வாழ்க என்று சொல்கிறோம். இந்தி பேசினால் தான் வேலை என்றால், அந்த வேலை வேண்டாம். அன்பு ஒன்று தான் எனக்கு தெரிந்த மதம், அதைவிட பெரிய மதம் மனிதம்” என்று அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.