போக்சோ வழக்கில் இழப்பீடு தாமதம்: உள்துறை முதன்மைச் செயலருக்கு ரூ.10,000 அபராதம் 

மதுரை: போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்காததால் உள்துறை முதன்மைச் செயலாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தவளைகுளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நாங்கள் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள். எனது 7 வயது மகளுக்கு 2020-ல் வேலுச்சாமி என்பவர் பாலியல் துன்புறுத்தல் அளித்தார். இது குறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்தனர்.

இந்த வழக்கை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் விசாரித்து வேலுச்சாமிக்கு 7 ஆண்டு கடும் காவல் தண்டனையும், எனது மகளுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும் என 17.3.2022 உத்தரவிட்டது. இழப்பீடு பணத்தை ஒரு மாதத்துக்குள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இதுவரை பணம் வழங்கவில்லை. எனவே இழப்பீட பணத்தை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு திட்டத்தில் இருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டு ஒரு ஆண்டாகியும் இதுவரை வழங்கப்படாததை ஏற்க முடியாது. இந்த தாமதத்துக்காக உள்துறை முதன்மைச் செயலாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்பணத்தை அவர் மனுதாரருக்கு வழங்க வேண்டும். கீழமை நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டு தொகையை 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். வழக்கு செலவு தொகையையும் மனுதாரருக்கு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.