சினிமாவில் இணை இயக்குநராக இருக்கும் விக்னேஷ் சிவன் (சச்சின்) தயாரிப்பாளரிடம் ஹாரர் கதை ஒன்றைக் கூறி ஓகே வாங்குகிறார். அதற்கான வேலையைத் தொடங்குவதற்குத் தனியாக ஒரு வீடு எடுத்துத் தங்குகிறார். அங்கே சில அமானுஷ்யங்கள் நடக்க, அடுத்தடுத்து அவர் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதே `டீமன்’ படத்தின் கதை.
கனவுகளால் குழம்பிய மனநிலை, தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாத கையறுநிலை ஆகிய சூழலைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார் கதாநாயகன் சச்சின். ஒரே மாதிரியான காட்சி அமைப்புகளுக்கு மத்தியில் தன்னால் முடிந்த அளவு வித்தியாசங்களைக் காட்ட முயற்சி செய்துள்ளார். நாயகி அபர்ணதியின் கால்ஷீட்டைப் பாடல்களுக்கு மட்டுமே வாங்கியிருப்பார்கள் போல! அதற்கு மேல் அவருக்கு வேலை இல்லை. நண்பராக வரும் கும்கி அஷ்வின் நடிப்பில் செயற்கைத்தனம் எட்டிப்பார்க்கிறது. நாயகனின் உதவி இயக்குநர் பட்டாளம் முழுவதுமே கேமராவைப் பார்த்துப் பேசிக் கொள்வது போன்ற உணர்வையே தருகிறார்கள்.

ஆரம்பமே தனியாக பங்களா, ஒரே ஒரு பெண், மின்வெட்டு, அமைதி, திடீரென தெரியும் உருவம் என வழக்கமான டெம்ப்ளேட்டான கதையைச் சொல்லி, அது நிஜமல்ல நாயகன் தன் படத்துக்காகத் தயாரிப்பாளரிடம் கதை சொல்கிறார் என ஆரம்பிக்கிறது. இது போன்ற பல டெம்ப்ளேட் குவியல்களைக் கொட்டி, ஒவ்வொரு காட்சி முடிந்த பின்பும் இது நிஜமல்ல நாயகனின் கனவு என்று சொல்வதில் முடிகிறது முதல் பாதி. ஏற்கெனவே பார்வையாளர்களை விலகிச் செல்ல வைக்கும் திரைக்கதை ஒருபக்கம் என்றால் நடு நடுவே காதலும் பாடலும் வந்து போகின்றன.
பேய் படத்துக்கான முதல்கட்ட வேலையே அச்ச உணர்வினைத் தந்து, அதைத் திரைக்கதையோடு சேர்த்து நிலையாகக் கொண்டு போவதுதான். இப்படத்தில் அதற்கான சிரத்தை எதுவும் திரைக்கதையிலிருந்ததாக தெரியவில்லை.
இரண்டாம் பாதி ஆரம்பிக்க, கண்ணாடியில் நாயகனின் உருவம் வயோதிகம் அடைந்தது போன்று தோன்றுகிறது. இதனால் ஓடுகிறார், கத்துகிறார். மனநல மருத்துவரைப் பார்க்கிறார். ஆனால் ஏன் அப்படி நடந்தது என்று படம் முடிந்த பிறகும் காரணம் சொல்லப்படவில்லை. இப்படிப் பல காட்சிகளைப் படத்திலிருந்து நீக்கினாலும் படத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பது பெரிய சறுக்கல்.

முதல் பாதியைப் போல “தூங்கினால் ஒரு பேய் கனவு” என்று இரண்டாம் பாதியும் பொறுமையைச் சோதிக்க, ஒரு வழியாகப் படம் முடியும் வேளையில் ஒரு கதை சொல்லப்படுகிறது. அது சமீபத்தில் வெளியான நெட்பிளிக்ஸ் ஆவணத்தொடரான “ஹவுஸ் ஆப் சீக்ரெட்ஸ்” கதையைத் தழுவிய உணர்வைக் கொடுக்கிறது. லாஜிக் மீறல்கள் பேய் படத்தில் இருக்கலாம். ஆனால் படத்தை விட்டு பார்வையாளர்கள் விலகிச் செல்லும் அளவிற்கு இருப்பது படத்தின் பலவீனமாக மாறிவிடும். உதாரணத்திற்கு இதற்கு முன் அந்த வீட்டில் குடிவந்த இரண்டு நபர்களையும் உடனே கொன்றுவிட்ட பேய், நாயகனிடம் மட்டும் எதுக்கு ஐஸ் பாய் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை.
ரோனி ரபேலின் பின்னணி இசையைப் பொறுத்தவரைக் கிடைத்த எல்லா காட்சிகளிலும் நிரப்பி வைத்திருக்கிறார்கள். சாதாரணமான காட்சிகளுக்கும் கனமான இசை கோர்ப்பு அவசியமற்றதாகத் தெரிகிறது. “இந்த இசையை எங்கோ கேட்டிருக்கிறோம்” என்ற உணர்வும் சில இடங்களில் ஏற்படுகிறது. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. இரவுக் காட்சிகளிலும், இரண்டு அறைகள் இருக்கும் வீட்டிற்குள்ளும் கேமரா கோணங்களையும், ஒளியுணர்வையும் சிறப்பாகக் கையாண்டுள்ளார் ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ்.ஆனந்தகுமார். கதையே இல்லாத திரைக்கதைக்கு எந்த விதத்தில் படத்தைக் கோர்க்க முடியுமோ அதனைச் செய்துள்ளார் படத்தொகுப்பாளர் ரவிக்குமார் எம். ‘இது நிஜமல்ல கனவு’ என்று மீண்டும் மீண்டும் வரும் கனவு காட்சிகளை வேறுவிதமாகக் கோர்த்திருக்கலாம். VFX மற்றும் கலை இயக்குநர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்துள்ளனர். குறிப்பாகப் பூட்டப்பட்ட அறையில் அந்தக் காலத்து வடநாட்டுக் குடும்பம் வாழ்வது போன்ற சித்திரிப்பில் கலை இயக்கம் கவனிக்க வைக்கிறது.

ஒரு குறும்படத்துக்கு உரியக் கதை என்றாலும் கதையின் நிகழ்வுகள், கதை சொல்லும் விதத்தில் மெனக்கெட்டு இருந்தால் பார்வையாளர்களை 2 மணிநேரங்கள் கட்டிப்போட்டுவிடலாம். பல படங்கள் இதற்கு உதாரணமாக இருக்கின்றன. ஆனால் இங்கே அந்த மெனக்கெடல் கேமரா மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய விதத்தில் மட்டுமே வெளிப்படுகிறது, கதையில் இல்லை.
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நாயகன், “இப்படி இரக்கம் இல்லாமல் நடந்துக்கிறியே நீ எல்லாம் பேயா” என்ற ரேஞ்சுக்கு டீமனிடம் (பேயிடம்) வசனம் பேசித் தப்பிக்கிறார். இதைச் சற்று முன்னர் செய்திருந்தால் நாமாவது தப்பித்திருப்போமே என்ற உணர்வையே தருகிறது இந்த `டீமன்’.