வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் – அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

வாரணாசி: உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி இன்று நாட்டினார்.

ஆன்மிகத்திற்குப் பெயர் பெற்ற காசி எனும் வாரணாசியில் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைய இருக்கிறது. இதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டினார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், கிரிக்கெட் பிரபலங்கள் சச்சின் டெண்டுல்கள், ரவி சாஸ்த்ரி, கபில் தேவ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கான அடிக்கல்லை நாட்டி பிரதமர் மோடி பேசியது: “இந்த நகரம் சிவபெருமானுக்கானது. இந்த ஸ்டேடியமும் சிவபெருமானுக்கே அர்ப்பணிக்கப்படும். பூர்வாஞ்சல் பகுதியின் மிகப் பெரிய அடையாளமாக இந்த ஸ்டேடியம் திகழும். இதன் மூலம் உள்ளூர் இளைஞர்கள் அதிக அளவில் பயன் பெறுவார்கள். விளையாடச் சென்றால் பெற்றோர்கள் திட்டும் காலம் ஒன்று இருந்தது. ஆனால், இன்று அந்த நிலை இல்லை. விளையாட்டுக்கான கட்டமைப்புகள் உருவாகுமானால், அது இளம் திறமையாளர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பைக் கொடுப்பதோடு, உள்ளூர் மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கிறது.

எதிர்வரும் நவராத்திரியை மேலும் உற்சாகமூட்டக் கூடியதாக மகளிர் இடஒதுக்கீடு இருக்கும். பெண்களின் வளர்ச்சிக்கான புதிய பாதையை இந்தச் சட்டம் திறந்துள்ளது. இதற்காக இந்திய பெண்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் என்பது நவீன அணுகுமுறையாக இருந்து உலகிற்கு வழிகாட்டும். இந்தியாவில் பெண்களுக்கு எப்போதும் மிக முக்கிய இடம் இருந்து வருகிறது. பார்வதி தேவியையும், கங்கா தேவியையும் நாம் வணங்கிவிட்டு பிறகுதான் சிவபெருமானை வணங்கும் வழக்கம் நம்மிடம் உள்ளது.

நமது நாட்டில் பெண்கள் தலைமையில் பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வுகள் நடந்துள்ளன. ராணி லட்சுமி பாய் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடியவர். சந்திரயான்-3-ன் வெற்றியிலும் பெண்களின் பங்களிப்பு உள்ளது. ஒவ்வொரு துறையிலும் பெண்கள் வெற்றிக் கொடி நாட்டி தங்களை நிரூபித்திருக்கிறார்கள். மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. கடந்த காலங்களில் இந்த மசோதாவை எதிர்த்த கட்சிகள்கூட தற்போது ஆதரவு அளித்துள்ளன. இந்த மசோதாவுக்கு ஆதரவாக கிடைத்த வாக்குகள் குறிப்பிடத்தக்கதவை.

பாஜக ஆட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வாரணாசியில் 75 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான வீடுகள் பெண்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆண்களின் பெயர்களில் வீடு வாங்கும் கலாசாரம் நமது நாட்டில் இருந்தது. ஆனால், பெண்களின் பெயரில் வீடுகளை பதிவு செய்யும் கலாசாரத்தை பாஜக தொடங்கி இருக்கிறது. வாரணாசியில் ஆயிரக்கணக்கான பெண்கள் வீடுகளுக்கு உரிமையாளர்களாக இருக்கிறார்கள். இது சமூகத்தில் பெண்களுக்கான மரியாதையை உயர்த்தி இருக்கிறது. விளையாட்டு முதல் ரஃபேல் விமானங்களை இயக்குவது வரை நமது பெண்கள் ஆச்சரியங்களை நிகழ்த்துகிறார்கள்” என்று பிரதமர் மோடி பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.